<$BlogRSDUrl$>

Thursday, February 26, 2004

நானும் சங்கீதமும் 

எனது மாமா பூஸ்ட்டுக்கு பதிலாக கர்நாடக சங்கீதத்தை கரைத்துக் குடித்தவர். காலை 5 மணிக்கெல்லாம் சாதகம் பண்ணுவது போக கிடைத்த நேரமெல்லாம் தியாகராஜரையும், முத்துசுவாமி தீக்ஷ்சிதரையும் பாடுவது வழக்கம். இது போக சாயங்காலம் சங்கீத வகுப்புகள் வேறு நடக்கும். நிறைய பெண்கள் வந்து சங்கீதம் சொல்லிக் கொள்வார்கள். 'திருதிரு' என்று முழித்துக் கொண்டிருந்த என்னையும் உட்கார்ந்து அவர்களுடன் பாட்டு கற்றுக் கொள்ள சொன்னார். நானும் உட்கார்ந்து தொடையை தட்டி (என் தொடையை தான்) ச.ரீ.க.மா-விநேன். அடுத்த நாள் காலையில் சாதகத்துக்கு எழுப்பி பார்த்தார். சாதகமாவது மோதகமாவது போர்வையை நல்ல இழுத்து போர்திக் கொண்டு தூங்கினேன். ஒரு வாரம் கழித்து 'அவனுக்கு பொம்மனாட்டிகளோடு உட்கார்ந்து கத்துக்க வெட்கமா இருக்காம் தனியா கத்துப்பானாம்' என்று மாமி விடு தூது அனுப்பினேன்.(வெட்கமெல்லாம் இல்லை சும்மா).அப்புறம் 'தனியாவது மிளகாயாவது' நைஸாக கம்பி நீட்டி விட்டேன். சின்ன வயதில் இருந்து வாளி, பாத்திரம் என்று எல்லாத்திலும் மிருதங்கம் வாசிப்பேன். அதனால் மாமவோடு கச்சேரிக்கு போகும் போது பாட்டை பார்க்காமல் மிருதங்கம் வாசிப்பவரையே நோட்டம் விடுவேன். சரி இதில் தான் பையனுக்கு ஆர்வம் போல என்று மாமாவும் ஊக்குவித்தார். கச்சேரி முடிந்து கடைசி பஸ்ஸை பிடிக்க ஓடிக் கொண்டிருந்த மிருதங்க வித்துவானை(என் குரு) விடாபிடியாக வீட்டுக்கு கூட்டி வந்தேன். அவரும் ஒத்துக் கொள்ளா விட்டால் பஸ்ஸை பிடிக்க விடமாட்டான் என்ற பயத்தில் சொல்லிக் கொடுக்க ஒத்துக் கொண்டார்.இரண்டு வருடம் ஆர்வமாக கத்துக் கொண்டேன். ஸ்கூலில் வயலின் கத்துக்கற நண்பனும் நானும் ஆண்டு விழாவிற்கு கட்சேரி பண்ணுகிறோம்ணு வேஷ்டி எல்லாம் கட்டிக் கொண்டு கூத்தடித்தோம். மார்கழி மாத பஜனைக்கு மிருதங்கம் வாசித்தேன். கூட கொஞ்சம் பொங்கல் குடுத்தார்கள். ஒரு நாள் யாரோ வரவில்லை என்று திடீர் உப்புமா கதையாக எனக்கும், என் நண்பனுக்கும் மிருதங்க அரங்கேற்றம் இனிதாக நடந்தேறி, ஆளுக்கு ஒரு தேங்காய் மூடியும் அழுகின பழமும் கிடைத்தது.'மிருதங்க சக்கரவர்தி' படத்தை பார்த்து தலைக்கேறி வாழக்காயை வைத்துக் கொண்டு மிருதங்கத்தை விளாசிப் பார்த்தேன். கை தான் பழுத்தது. காலேஜ் காலத்தில் வித விதமா பெண்குட்டிகள் வருவார்களே என்று போட்டிகளுக்கு போனதில் ஒன்னுக்கும் உபயயோகப்படாத மெடல்கள் நிறைய கிடைத்தது. ஒரு ஜிகிடி "நீங்கள் நன்றாக கொட்டு வாசிக்கிறீர்கள்" என்றாள். என்னமோ தியாகராஜ பாகவதரின் பேரன் மாதிரி "கொட்டா?? அது மிருதங்கம்!!" என்று ஒதுங்கி போனேன். நம்ம திறமைக்கு இவ்வளவு தான் தேறும் போலனு நினைத்த போது தியாகராஜரின் கருணையெ கருணை வாழ்க்கை பரிசாக என் மனைவி கிடைத்தாள்.(எப்பிடி என்ற விபரமெல்லாம் அப்புறம் :P) ஆனா என்ன, நான் பாட்டு பாடினா 'உஙக அப்பாக்கு என்ன ஆச்சு? ஏன் இப்பிடி அழறார்?' என்று செல்ல மகளிடம் நக்கல் விடுகிறாள். இப்பவும் கோவிலுக்கு போனால் தவில்காரரை ஆர்வத்துடன் பார்ப்பேன். அவரும் நான் பார்க்கிறேன் என்று பந்தா பண்ணிக் கொண்டு வாசிப்பார். ஐய்யோ பாவம், அவர் கஷ்டம் எனக்கும் தெரியும்.


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
     

This page is powered by Blogger. Isn't yours?