<$BlogRSDUrl$>

Thursday, March 18, 2004

புயலொன்று புஸ்வானமான கதை - 2 

போட்டோவை பார்ததும் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்த்து.

"ஏங்க சுமாரா தாங்க வந்திருக்கு"

முறைத்துக் கொண்டே மேலிருந்து கீழ் பார்வையுடன் "இருக்கறது தான் வரும்"-எதிர் பார்த்த பதில் தான் கிடைத்தது.

"இந்த டப்பா கேமராக்கே மனசுல அவனுக்கு என்னமோ பி.சி.ஸ்ரிராம்னு நினைப்பு இங்க வந்திருக்கவே கூடாது" எனக்கு நானே மனசுக்குள் சொல்லிக் கொண்டேன்.

போட்டோவுடன் குறிப்பு அனுப்ப வேண்டுமே. "இந்த கதையை படித்து நாலு பேர் யோசித்தால் ரொம்ப சந்தோஷப் படுவேன். சமுதாயம் உருப்படனும், மக்கள் மாற வேண்டும் ஆனை பூனை..அம்பத்திரெண்டு...மொத்தத்தில் "இந்தியா ஒளிர வேண்டும்" என்று ஒரே பேத்தல்.

இரண்டு வாரம் கழித்து பத்திரிக்கையில் முடிவு வெளியாகியது. என் பேரை தேடித் தான் கண்டு பிடிக்க வேண்டியிருந்தது. என்னை மாதிரி யாரும் தேடி கண்டுபிடித்ததாக தெரியவில்லை.

என்னடா உலகம் இதுனு இருந்தது. இருக்கட்டும் என் போட்டோவும் கதையும் வரட்டும் ..அப்போ வெச்சுக்கறேன்.

அது வார பத்திரிக்கை...வாரா வாரம் ஞாயிற்றுக் கிழமை எப்போடா வரும் ஆவலோடு காத்திருக்கலானேன். பால்காரன் வந்தார், வேலைக்காரி வந்தார், பேப்பர் வந்தது, பத்திரிக்கை வந்தது ஆனா என் போட்டோவும் கதையும் மட்டும் வரவே இல்லை.

"ஏய் உன் போட்டோ வந்திருக்குடா..."

"எங்கேடா எங்கேடா?"

"ம்ம்ம் இங்கேடா "....யாரோ மண்டையை போட்டதுக்கு வருந்தி வந்திருந்தை காட்டி நக்கல் விட்டார்கள்.

"டேய் வேண்டாம்...இருக்கற எரிச்சலில் அடிச்சேனா நாளைக்கு உன் போட்டோ வந்திரும் அந்த இடத்துல ஓடிப் போயிருடா"

அப்புறம் என்னவேனா ஆகட்டும்னு அந்த பத்திரிக்கையை கொஞ்சம் நாள் பார்க்கவே இல்லை. ஒரு நாள், சுகமாக தூக்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு அப்பா பேப்பரும் கையுமாக எழுப்பினார்.

"டேய் வேற நல்ல போட்டோ ஏதாவது குடுக்க கூடாதாடா..."

அடிச்சு புரண்டு எழுந்திருந்தேன். ஹீ...ஹீ போட்டோவுடன் ..கதாசிரியர் இங்கு இன்ன படிக்கிறார்...ரொம்ப சிறந்த தேசபக்தி உடையவர்னு குறிப்பு வேறு. எனக்கே ரொம்ப வெட்கமாக இருந்தது. சும்மாவே இவனுங்க ஓட்டறதுக்கு குறைச்சல் இல்லை இதுல இது வேறயா, என்ன சொல்லி சமாளிக்கலாம்னு ஒரே யோசனை.

"என்ன மாமா உங்க பையனோட போட்டோ பத்திரிக்கைல வந்திருக்கு போல...கதை ரொம்ப நன்னாயிருக்கு" ஒரு ஜிகிடியின் தோப்பனார் சர்டிபிகேட் கொடுத்தார்.

"மாமா உங்க பொண்ணுகிட்டயும் அப்பிடியே சொல்லுங்கோ அவ பக்கதாத்த்து பொண்ணு கிட்டயும் சொல்லச் சொல்லுங்கோ" மனசுக்குளிருந்த மைனர் குரல் குடுத்தார்.

காலங்கார்தாலேயே குளித்து உம்மாச்சியெல்லாம் கும்பிட்டுவிட்டு, எங்கேயோ போவது போல் சும்மா தெருவில் கிழக்கும் மேற்குமாக நாலு தரம் நடந்தேன்.

சும்மாவே வம்படிக்கும் தெருவில் ...விஷயம் அதற்குள் பரவி இருந்தது.

"ரமேஷண்ணா உங்க போட்டோ இன்னிக்கு பத்ரிக்கையில வந்திருக்கு" ஒரு சின்ன பெண் சொன்ன போது .."இதெல்லாம் என்னோட அரசியல் வாழ்கையில ரொம்ப சகஜமப்பா.."ங்கற மாதிரி லுக்கு விட்டேன்.

ஒரு பெரிய வக்கீல் நண்பர்களோடு அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்.

"அம்பி இங்க வா" என்று கூப்பிட்டு ..."எனக்கு தெரிஞ்ச பையன் தான் ...கதையெல்லாம் எழுதுவார்..பெரிய எழுத்தாளர்..இன்னிக்கு பத்ரிகையில கூட போட்டோலாம் வந்திருக்கு" என்று குண்டைத் தூக்கி போட்டார்.

எழுத்தாளரா? அதுவும் பெரிய எழுத்தாளரா...சர்தான் வக்கீல் கண்டிப்பா ஏதோ வம்புல மாட்டி விட போறார்..மனதில் பல்பு எரிஞ்சுது. ஒருவேளை பொய் சாட்சி சொல்ல கூப்பிடுவாரோ...? விடு ஜூட் ஓட்டம் பிடித்தேன்.

இப்பிடியாக சுத்துப்பட்டியில் பரவி இருந்த நம்ம எழுத்துப் புகழ் காலேஜுக்கு இடம் பெயர்ந்த்து.

எதுடா சாக்குனு நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு காத்திருந்த பஞ்சத்துக்கு பொறந்த பயல்கள்...ட்ரீட்னு சொல்லிக் கொண்டு பக்கத்திலிருந்த ஹோட்டலுக்கு கூட்டிக் கொண்டு போனார்கள்.

விட்டால் ஆளையே அடித்து சாப்பிடுகிற காட்டான்களுக்கு, அசைவம் குடுத்து கட்டுப்படியாகதென்று வேறு வழியில்லாமல் நல்ல சைவ ஹோட்டலுக்கு கூட்டி போனேன். போன ஜென்மத்தில் ஹோட்டல்காரர்க்கு நிறைய கடன் வெச்சிருப்பேன் போல...நாலைந்து மாதங்களுக்கு சேர்த்தே தாராளாமாய் பாத்தி கட்டி குழைத்துக் அடித்துக் கொண்டிருந்தார்கள் என் தளபதிகள்.

"ஏன்டா நீ சாப்பிடலை?" எவனோ ஒருவன் போனால் போகிறதென்று கேட்டான்.

"அவனுக்கு நல்ல மனசுடா நாம சாப்பிடறத பார்த்தே மனசும் வயிறும் நிறைஞ்சிருக்கும்" - ராமநாரயணன் படத்து செண்டி டயலாக் வேறு இதில்.

எல்லாம் முடிந்து பில்லை குடுத்துவிட்டு பார்த்ததில்..பரிசாக வந்திருந்த பணத்தில் காலணா மிஞ்சியது.

இனிமேல் இது மாதிரி விஷயமெல்லாம் இந்த புண்யவான்கள் காதிற்கு எட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் - கண்ணை பிடுங்கிய பின் சூர்ய நமஸ்காரமும் சபதமும் பண்ணினேன்.

ஏப்பம் விட்டுக் கொண்டே நமுட்டுச் சிரிப்பு சிரித்தார்கள். ஏதோ சொல்ல வந்தது போல் தெரிந்தது.

"ஏன்டா மனுசணை கலங்க அடிக்கிறீங்க ...விஷயத்தை சொல்லுங்கடா..."

"எல்லாம் சரிடா...எங்களுக்கெல்லாம் ஒரு சந்தேகம்...உங்க வீட்ல வெச்சுருக்கியே ஒரு தண்டி இங்கிலீஸ் புஸ்தகம்...நீ அத பார்த்து உல்டா பண்ணி இந்த கதையை எழுதினியா? இல்ல வேறெதாச்சும் வைச்சு இத உஷார் பண்ணினயா?..சொன்னா நாங்களும் எழுதி உனக்கு ட்ரீட் குடுப்போம்ல..."

"டொம்"ன்று ஒரு சத்தம்...என் இதயம் தான் வெடித்தது...முன்னால் செய்த சபதத்தை கேன்சல் செய்து விட்டு ...இனிமேல் கதையே எழுத கூடாதுனு சபதம் செய்தேன்.

டமில் உலகதிற்கு எவ்வளவு நஷ்டம்....நானும் அகநானூறு மாதிரி நிறைய லேகியமெல்லாம் எழுதி இருப்பேன்...ஹும்ம்ம்ம்ம்ம்

பின் குறிப்பு - தலைப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிப்பவர்களுக்கு - ஆஞ்சனேயா படத்திற்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்? ...இதெல்லாம் பெரிய மனசு பண்ணி கிளறாதீங்க...:)


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
     

This page is powered by Blogger. Isn't yours?