<$BlogRSDUrl$>

Wednesday, March 24, 2004

கவிதெ ! கவிதெ! 

பத்தாவது படிக்கும் போது பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன். பள்ளிக்கு புது தமிழ் வாத்தியார் வந்திருந்தார். இள ரத்தம். முதுகலை முடித்த கையோடு நேராக வந்திருந்தார். "மாசில் வீணையும்..." உருத் தட்டிக் கொண்டிருந்த கான்வன்டில், புதுக்கவிதையை அறிமுகப்படுத்தினார். பையன்களுக்கு ஆர்வம் வரனுமே என்று இலுப்புச்சட்டி, அல்வா துண்டம், இடுப்பு மடித்த மசால் தோசைனு பெண்ணை உருவகப்ப்டுத்தி கவிதை சொன்னார் (நல்ல கவிதை..ஆனா நியாபகம் இல்லை). பசங்கோஸ்..உருவகம், கவிதை நடை இதெல்லாம் விட்டு விட்டு அடிக்கடி "மசால் தோசை கவிதை சொல்லுங்க சார்"னு அரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அவர் சொன்ன கவிதைகளெல்லாம் நன்றாக இருந்தது. அதோடு பேச்சுப் போட்டிக்கெல்லாம் வேறு மேற்கோள் காட்டி பேசியதிலிருந்து கொஞ்சம் பாதிப்பு. பத்தாங் கிளாசில் படித்துக் கொண்டு பதினோராம் கிளாஸ் பொண்ண வேறு ரூட் விட்டுக் கொண்டிருந்தேன். எல்லாமாக சேர்ந்து என்னமோ பண்ணி வெத்து பேப்ப்ரை வெட்டி சின்ன புஸ்தகம் மாதிரி செய்தேன். முதலில் எதுகை மோனையாக வார்த்தையெல்லாம் எழுதி வைச்சுப்போம் கவிதை எழுத உபயோகமாய் இருக்கும் என்று எழுத ஆரம்பித்தேன்.

"வெந்நீர், பன்னீர், காலை,மாலை, வேலை, வெங்காயம், பெருங்காயம், கருப்பு, பருப்பு..." கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது.

மாமா எங்கிருந்தோ வந்தார். "ஒரு பேப்பரும் பேனாவும் தா...அதோ அந்த மாதிரி நீளமா வேனும் அத தா ஒரு பேப்பர் கிழிச்சுண்டு தரேன்"னு வாங்கிக் கொண்டார்.

வாங்கினவர் என்ன எழுதிருக்கேன்னு முனு முனுவென்று வாசிக்க ஆரம்பித்தார்.

"பலசரக்கு லிஸ்ட் எழுதனும் அட இது கூட உபயோகமாய் இருக்கும் போல" என்று வேண்டாததை அடித்து விட்டு வேணுங்கறதுக்கு பக்கதில் அரை கிலோ, ஒரு கிலோனு திருத்த அரம்பித்துவிட்டார்.

பலசரக்கு ஐட்டத்தையெல்லாம் தவிர்த்து புது லிஸ்ட் எழுத ஆரம்பித்தேன். நான் 'கவிதெ' எழுத முயற்சிக்கிறேன்னு மோப்பம் பிடிச்சு ஒரு நண்பன் வந்தான்.

"டேய் அத இப்பிடி கொண்டா பாப்போம்" பிடுங்கி வாசிக்க ஆரம்பித்தான். சிறிதும் பெரிதுமாய் வரிக்கு ஒரு வார்த்தை இருந்தது லிஸ்ட்டில்.

"அட நல்லா இருக்குடா...இது தான் கவிதையா...."

அட ராமா....மண்டையில அடிச்சுக்காத குறை தான்.
அதுக்கப்புறம் கெக்க பிக்கென்னு என்னமோ எழுதி வாத்தியாரிடம் காண்பித்தேன். ஐய்யோ பாவமேனு திருத்த ஆரம்பித்து திரும்பவும் முழுவதையும் எழுதிக் கொடுத்தார்.

இப்ப தான் கவிஞர்களெல்லாம் "வசந்த் அண்ட் கோ" ஓனர் மாதிரி கோட் சூட்லாம் போட்டுக் கொண்டு ஷோக்காய் இருக்கிறார்கள். அப்போலாம் நான் பார்த்த கவிஞர்களெல்லாம் தாடி வைத்துக்கொண்டு, ஜிப்பா போட்டுக் கொண்டு சோடா புட்டி அனிந்திருந்தார்கள். சரி இதெல்லாம் நமக்கெதுக்குனு அப்புறம் கவிதெ எழுதவே இல்லை. உண்மை என்னவென்றால் 'கவிதெ' ரொம்ப வரலை.

ஏ பி சி டி எங்கப்பன் தாடி
ஓ பி சி டி உங்கப்பன் தாடி

இதைத் தாண்டி "மாசறு பொன்னே...வலம்புரி முத்தே...." எழுத நிறைய பேர் இருந்த்தால் வேறு ஜோலி பார்க்க போய்விட்டேன்.

ஆனா காலேஜில் நெருங்கிய நண்பன் கவிதையெல்லாம் எழுதுவான். அடிக்கடி ப்பீலிங் ஆகி மோட்டுவளையத்தை பார்ப்பான். கிழிச்சு போட்ட டிக்கெட்டை கூட விட மாட்டான் கவிதை எழுத ஆரம்பிட்துவிடுவான். லெட்டரில் மாய்ஞ்சு மாய்ஞ்சு "கவிதெ" எழுதி அனுப்புவான்.(எனக்கு தான். மேற்படி கிட்டலாம் சொல்ல தில் இல்லெ) "இதெல்லாம் அப்பிடியே வரது தான் இல்ல?"னு நக்கல் விட்டாலும் கோபித்துக் கொள்ள மாட்டான்.

காதலுக்கும் கத்திரிக்காய்க்கும் சம்பந்தம் இருக்கோ இல்லையோ...கவிதைக்கு சம்பந்தம் இருக்குங்கற மாதிரி அடிக்கடி உணர்சிவசப்படுவான். ஜலதோஷம் பிடித்த மாதிரி மூக்கால் பாட்டெல்லாம் பாடுவான். காதல் வியாதியா இல்லை கவிதை வியாதியா கண்டுபிடிக்கவில்லை.

நானும் ஒரு "கவிதெ" லெட்டரில் எழுதி அனுப்பினேன்

மானே..தேனே..பேனே
கண்ணே பொண்ணே...புண்ணே
அன்பே கரும்பே...இரும்பே
அன்னமே
ஒன்றரை லிட்டர் கிண்ணமே
கவிதை கவிதை

நானும் காதலிக்கிறேனோ !!


ம்ஹூஹூம் அன்னிக்கு காணாம போனவன் தான் அதுக்கப்புறம் அவனிடமிருந்து பதிலே.....வரவில்லை


பின்குறிப்பு - ஐய்யா இதில் கவிதையையோ நிஜ கவிஞர்களையோ கேலி செய்யலை. நிஜ கவிஞர்கள் படித்தீர்களானால் கோச்சுக்காத சாமி சொல்லிபுட்டேன் ஆமா.


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
     

This page is powered by Blogger. Isn't yours?