Thursday, April 15, 2004
நாமதேவரும் கைப்பிடி சுண்டலும் - 5
முதல் வேஷ்டி அனுபவத்திற்கு பிறகு அடிக்கடி கட்டிப் பழகியதால் அதற்கப்புறம் பிரச்சனையில்லாமல் இருந்தது. "எஜமான்" ரஜினி மாதிரி தழைய தழைய கட்டுவதிலிருந்து, "தேவர்மகன்" கமல் மாதிரி தூக்கி கட்டுவது வரை எல்லா ஸ்டைலும் கை வந்த கலையாயிற்று.
அரும்பு மீசை வளர ஆரம்பித்த ஆரம்ப காலேஜ் நாட்களிலிருந்து வேஷ்டி தினமும் கட்ட ஆரம்பித்தேன்.(என்னமோ லுங்கி அவ்வளவு பிடிக்கவில்லை).
பஜனையிலும் சீனியர் அந்தஸ்து கிடைக்க ஆரம்பித்தது. டெய்லி காலையில் முதல் ஆளாகவந்து கூட்டத்தை கூட்டும் பொறுப்பெல்லாம் வந்தது. ஒ,பி அடிக்க முடியாமல் பாட்டெல்லாம் வேறு பாடவேண்டியிருந்த்து. ஆனாலும் குறும்புக்கு மட்டும் குறைச்சலே இல்லை.
ஒரு மாமா தினமும் கரெக்டாக அவர் வீடு பக்கம் பஜனை வந்தவுடன் "சித்த இத பிடிடா..வயத்த கலக்கறது ஒரு நடை போய்ட்டு வந்துடறேன்"ன்னு போய்விடுவார்.
"அதெப்பிடிடா அவருக்கு மட்டும் வீடு வந்தோடனே அலாரம் வைச்ச மாதிரி ஆய் வரது?"-பையன்களுக்கு சந்தேகம் மண்டையைக் குடைந்தது. ரகசிய புலன்விசாரணைக் கமிஷன் வைத்தார்கள்.
"ஆயாவது நாயாவது..அவாத்து பால்காரன் லேட்டா வரான். மனுஷனுக்கு காலம்பற காப்பி குடிக்கலன்னா நரம்பு வெட்டி வெட்டி இழுக்க ஆரம்பிச்சுறும். அதான் சாக்குச் சொல்லிட்டு போறார்" அடுத்த நாளே சி.ஐ.டிகள் போட்டு உடைத்தார்கள்.
குறும்புகளுக்கும் குதூகலத்துக்கும் குறைவே இல்லாமல் எதாவது விஷேசங்கள் வந்து கொண்டே இருக்கும்.
ராதா/சீதா கல்யாணம் -காலையில் ஆரம்பித்து மதியம் 2/3 மணி வரை நடக்கும். சம்பிரதாய பஜனை முறைப்படி ஆரம்பித்து தீபபிரக்தஷ்ணம், டோலோஸ்தவம் என்று விஸ்தீரணமாகச் செல்லும். சம்பிரதாய பஜனை என்பது குறிப்பிட்ட வரிசையில் நாமாவளிகளையும், ஜெயதேவர் அஷ்டபதிகளையும் பாடுவார்கள். இதன்பின் திவ்ய்நாமசங்கீர்தனம். இதில் தான் தீபபிரக்தஷ்ணம். ஒரு தீபத்தில் இறைவனை ஆவாகனம் செய்து அதைச் சுற்றிப் பாடிக்கொண்டே ஆடுவார்கள்.
இதுவரைக்கும் விஷயம் தெரியாமல் "பெக்க பெக்க"வென்று முழித்துக் கொண்டிருப்போம். இதுவந்தவுடன் பையன்களுக்கு உற்சாகம் பீறிட்டுக் கிளம்பும்.
தீபபிரக்தஷ்ணம் பண்ணுகிறோம் பேர்வழியென்று உள்ளூர் மாரியாத்தா கோவில் சாமியாட்டத்திலிருந்து பேட்டை ராப் பிரபுதேவா ஆட்டம் வரை எல்லாவற்றையும் ஆடித்தீர்ப்பான்கள் பையன்கள். அதிலும் பார்பதற்கு ரெண்டு குட்டிகள் இருந்து விட்டால் கேட்கவே வேண்டாம். வைஜெயந்திமாலா பத்மினி மாதிரி போட்டி போடுக்கொண்டு ஆட்டம் தூள் பறக்கும். பாட்டு முடியும் வரையிலுமோ அல்லது யாராவது வந்து அடக்குகிற வரையிலுமோ பையன்களின் இந்த கூத்து தொடரும்.
ராதா/சீதா கல்யாணம் முடிந்த பிறகு டோலோஸ்தவம். நலுங்கு, பூப்பந்து எறிந்து விளையாடுதல் அனைத்தும் நடக்கும். ராதா கல்யாணத்தை நடத்தும் பாகவதர் ஒரு பூப்பந்தை யாரிடமாவது எறிவார். அதை காட்ச் பிடித்து திருப்பி வேறுயாரிடமாவது எறியவேண்டும். விளையாட்டு ஆரம்பிப்பதற்கு முன்னாலே வசதியாக உட்கார்ந்து கொண்டு பையன்கள் எப்பிடியாவது குறுக்கே புகுந்து பிடித்துவிடுவார்கள். அப்புறம் எதாவது ஒரு மாமாவை நடுவில் வைத்துக் கொண்டு மன்கி கேம் விளையாடுவார்கள். பார்பதற்கு காமெடியாக இருக்கும்.
இதற்கு அப்புறம் ராமரோ கிருஷ்ணரோ இரவு தூங்கி காலை எழுப்புவது மாதிரி ஒரு சம்பிரதாயம். அதற்கு கோழி மாதிரி கூவச் சொல்வார்கள். ஒரு முறை கோழியோடு நாய் குலைப்பது மாதிரி குலைத்து ஓரமாக நைஸாக தூங்கிக்கொண்டிருந்த ஒரு மாமாவை எழுப்பிவிட்டான் நண்பன். அவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
"ஏண்டா நாய்ப்பயலே..கோழி மாதிரி கூவறத விட்டுட்டு ஏன்டா நாய் மாதிரி குலைகற?"
"சும்மாத்தான் மாமா...ஒரு ரியல் எபெக்டுக்குத்தான்...காலங்கார்த்தால நாய் குலக்கறதே இல்லையா?"
"எல்லாம் எனக்குத் தெரியும். இந்த நையாண்டியெல்லாம் வேற எங்கயாவது வைச்சுக்கோ. நான் பொல்லாதவனாக்கும் மண்டைய உடைச்சு மாவிளக்கு ஏத்திறுவேன் ஜாக்கிரதை" - தூக்கத்தைக் கலைத்த கோபத்தில் பலமாகவே மிரட்டினார் மாமா.
மார்கழி முடிந்து பொங்கல் வரை பஜனை இருக்கும். அப்புறம் ஏப்ரல் மாதம் வாக்கில் ராம நவமி வரும் அதற்கு பத்து நாள் கொண்டாட்டங்களும் கச்சேரிகளும் இருக்கும். மிகவும் பசுமையான நாட்கள் அவை. விளையாட்டுத்தனத்தை மட்டுமே விவரித்திருந்தாலும் நிறைய கற்றுக்கொள்ளவும் செய்தேன். இன்றும் ஊரில் மார்கழி மாத பஜனை நடந்து வருகிறது. "என்ன இருந்தாலும் நீங்க இருந்த போது நடந்த மாதிரி சிறப்பா இல்லைடா" என்று ஒரு மாமி போனமுறை ஊருக்கு சென்ற போது சொன்னபோது உண்மையிலேயே மனதை என்னவோ செய்தது.பஜனை மடத்தை ஒட்டி நாங்கள் முன்னின்று கட்டிய பிள்ளையார் கோவில்.சின்னதாக இருந்தாலும் இன்னுமும் கம்பீரமாக இருக்கிறது. அங்கே நாங்கள் நட்ட ஆலம் கன்று இப்போது வளந்து மிகப் பெரிய மரமாகிவிட்டது.
மார்கழி மாத பஜனை, பிள்ளையார் கோவில், ஆலமரம் எல்லாவற்றையும் பற்றி இன்னுமும் எனக்கு எழுதி அனுப்பிக் கொண்டிருக்கிறார் ரகு அண்ணா - மடலில்
- முற்றும்
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad.