Tuesday, May 04, 2004
பிறந்தநாள்...
வீட்டைக் கட்டிப் பார், கல்யாணத்தை நடத்திப் பார். நானாயிருந்தால் பிறந்த நாள் கொண்டாட்டத்தையும் சேர்த்திருப்பேன். அப்பா சாமி தலை சுத்தி இப்போதான் கொஞ்சம் நிலமைக்கு வந்திருக்கேன். பரவால்ல என் புள்ளதாச்சி மனைவியோடு ஒரு வழியா நல்ல படியாக நடத்தி முடிச்சுட்டோம். இத்தனைக்கும் மூன்று வாரங்களுக்கு முன்னாலேயே ப்ளான் போட்டு வாரக்கடைசிகளில் வாஙக ஆரம்பித்துவிட்டோம். ஆனாலும் தொட்டு தொட்டு வேலை இருந்து கொண்டே தான் இருந்தது. வீட்டை சுத்தப் படுத்தும் வேலையில் என்ன பொழப்புடா இது - மாட்டைக் கூட குளிப்பாட்ட வேண்டி இருந்தது.(ஹீ ஹீ எங்க வீட்டுல ப்ரெஷ் ஹோல்டர் மாடு வடிவத்தில் இருக்கும்). ஹோட்டல் பாதி சமையல் மீதி என்று ஆளவந்தான் ஸ்டைலில் முடிவாயிருந்தது. சுவை, தரம்,மணம்,பணம் எல்லாவற்றையும் குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்கக் கொண்டு தேர்தெடுத்த ஹோட்டலை அம்போவென்று விட்டுவிட்டு கடைசியில் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள ஹோட்டலுக்கே லாட்டரி அடித்தது.
செய்ய வேண்டிய வேலை எல்லாத்தையும் சரி பார்த்துக்கொண்டிருந்த மனைவி திரும்பத் திரும்ப கேட்டாள்
"ஹோட்டலிலிருந்து வாங்கி வர வேண்டாமா? கடைசி வரையில் வைத்துக்கொள்வார்களா? போட்டோ எடுக்க ப்லிம் எல்லாம் போட்டு வைச்சாச்சா?"
"அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் நீ எல்லாத்தையும் போட்டு மண்டைய குழப்பிக்காத"
இரண்டு மணிநேரம் முன்னாடி ஹோட்டலிலிருந்து ஆர்டர் குடுத்திருந்ததை வாங்கி வந்தேன். வாங்கி வந்ததை திறந்து பார்த்தால், வணக்க்க்க்கெம் என்று குழப்பங்கள் ஆஜர்.....சட்னியைக் காணோம். திரும்ப போய் வாங்க முடியாதென்று போன் செய்து வீட்டிற்கு கொண்டுவந்து குடுக்கச் சொன்னேன்.
நான்கு மணிக்கு என்று சொன்னால் தான் நாலரை மணிக்கு வருவார்கள் என்று பாட்டிக் கணக்கு போட்டு சொல்லி இருந்ததோம். நம்ம யோகத்திற்கு ஒரு நண்பர் கிளம்பிவிட்டதாக தொலைபேசியில் சொன்னார். வழியில் போக்குவரத்தினால் தாமதமாகுமென்று சீக்கிரமே கிளம்பிவிட்டிருக்கிறார். அதே போல் இன்னும் இரண்டு பேர் கிளம்பி இருக்கிறார்கள். எப்பிடியும் கார் நம்மூரை தொடுவதற்க்கு இன்னும் ஒரு மணிநேரமாகும் என்று அரக்க பரக்க மனைவியும் குழந்தையும் தயாரக ஆரம்பித்தார்கள். நான் சுப்பன் மாதிரி பனியனோடு தோட்டதிலிருந்த இருக்கைகளை கழுவிக்கொண்டிருந்தபோது இன்னொரு நண்பன் தொலைபேசியில் வழி கேட்டான். அவன் வந்தடைந்திருந்த இடத்திலிருந்து இரண்டு நிமிஷம் தான் ஆகும் எங்கள் வீட்டிற்கு. அவ்வளவு தான் அவ்வை சண்முகி மாதிரி எல்லாத்தையும் அப்பிடியே போட்டுவிட்டு அரக்க பரக்க குழாயை மாட்டிக்கொண்டு வரவேற்பறை பெண் மாதிரி இன்முகத்தோடு வரவேற்றேன்.
விருந்தினர்கள் ஒவ்வொரு பேராக வர ஆரம்பித்தார்கள்.சட்னியும் வந்து மனதில் (தேங்காய்)பால் வார்த்தது. தமிழ்பட முடிவில் சிரிக்கற மாதிரி எல்லாரும் சேர்ந்து சிரிக்கிறார்களே...போட்டோ பிடித்து வைத்துக்கொள்வோமென்று காமிரா பையை பிரித்து பார்த்தால் இருக்கிறதென்று நினைத்திருந்த ப்லிமிக்கு பதிலாக வெறும் அட்டைப்பெட்டி தான் இருந்தது.
தூரத்திலிருந்து நெற்றிக்கண் பார்வை பார்துக்கொண்டிருந்த தங்கமணியை நான் திரும்பியே பார்க்கவில்லை(தங்கமணி மனைவி பெயரில்லை - சும்மா அக்னிநட்சத்திரம் ஜனகராஜ் பாணியில் அப்பிடிக் கூப்பிடுவேன்). அப்புறம் காமிராவில் மிச்சமிருந்த ஆறு போட்டோக்களை வைத்துக்கொண்டு நான் ப்லிம் காட்டிக்கொண்டிருக்கையில் ஆபத்பாந்தவனாக ஒரு நண்பன் பக்கத்து கடைக்குச் சென்று வாங்கிவந்துவிட்டான்.
சரி கேக்கை வெட்டுவோம் என்று எல்லாவற்றையும் எடுத்து வைக்க நான் எத்தனிக்கையில் வாங்கி வைத்திருந்த மெழுகுவர்த்திகளைக் காணோம். இதுவும் பக்கத்து நாட்டு சதிதான் என்று மனைவிக்கு சமாதானம் சொல்லி கண்ணன் தேவன் டீ விளம்பரம் மாதிரி காடு மலையெல்லாம் ஓடியே மெழுகுவர்த்தியை தேடி கண்டுபிடித்து வாங்கி வந்தேன்.
இவ்வளவு கஷ்டப்பட்டு ஓடி வாங்கி வந்து ஏற்றியதை ஏற்றிய உடனேயே என் செல்ல மகள் ஊதி அனைக்க அனைவரும் வெள்ளக்காரன் மாதிரி பாட்டு பாடி கைத்தட்டினோம்.
அப்புறமென்ன சாப்பாடு தான். சாப்பாடு மிக நன்றாக இருந்ததென்று எல்லாரும் வாயார புகழ என் மனைவி பிதாமகனில் வந்துட்டாய்யா கோடீஸ்வரி என்று சூர்யா சொல்லும் போது ஒரு அம்மணி பெருமையாய் புன்னகைப்பார்களே அதே மாதிரி என்னைப் பார்த்து புன்னகைக்க நான் பாசமலர் சிவாஜி மாதிரி ப்லீங்கா திரும்ப புன்னகைக்க...பார்ட்டி இனிதே நிறைவடைந்தது.
அந்த போட்டோ ப்லிம் மேட்டர தங்கமணி பார்ட்டி முடிந்து கேட்பாளென்று நினைத்தேன். என்னமோ மறந்துவிட்டாள். இதைப் படித்து பிறகு மண்டகப்படி நடந்தாலும் நடக்கும். ஈஷ்வரா...
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad.