Wednesday, June 02, 2004
இரண்டு மனம் வேண்டும்...
டுபுக்கு ஆரம்பித்தது ஆங்கிலம் மற்றும் தமிழ் பதிவுகளைப் போட. தமிழ் பதிவுகள் மட்டுமே இருந்தால் தான் தமிழ் வட்டத்தில் ஆட்டத்துக்கு சேர்த்துக்கொள்வார்கள் போல என்று தோன்றிய காரணத்தால் காசா பணமா...தமிழ் டுபுக்கு ஆரம்பித்தேன். ஒரே ரீல் பொட்டியை ரெண்டு தியேட்டரில் ஓட்டுவது மாதிரி (கிராமத்தில் இருந்திருந்தால் இது புரியும்) ஆங்கிலப் பதிவு போடுவதை அம்போவென்று விட்டு விட்டு...இப்போதெல்லாம் ஒரே தமிழ் பதிவையே ரெண்டு இடத்திலும் போட்டு ஓட்டிக் கொண்டிருக்கிறேன். நக்கீரர்கள் யாரும் கேள்வி எழுப்பாவிட்டாலும்...எனக்கே இது எதுக்கு என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. எதாவது ஒன்று போறாதா? எதற்க்கு இந்த மறு ஒளிபரப்பு?
ஒரு கடையை இழுத்து மூடுவோமென்றால் இரண்டு பக்கங்களுக்கும் நிறைய பேர் இல்லாவிட்டாலும் சொற்ப பேராவது வந்து போகிறார்கள். அவர்களுக்குச் சிரமமாக இருக்காதோ? என்ன செய்யலாம் சொல்லுங்கள். எந்தக் கடையை மூடட்டும்?
சமீபத்தில் யாரோ ஒரு பிரகஸ்பதி "தமிழ் பெண்கள் தொடை" (tamil pengal thodai) என்று ஆங்கிலத்தில் தேடி என் வலைப்பதிவுக்கு வந்திருக்கிறார். வந்து பார்த்துவிட்டு விளக்கெண்ணை குடித்த மாதிரி முழித்திருப்பார் என்பது வேறு விஷயம்.(எப்பிடி முழித்திருப்பார் என்பதை நேரில் பார்த்திருந்தால் கணஜோராய் இருந்திருக்கும்).
இவரைப் போன்றவர்கள் ஏமாறுவார்களே என்று லேசாக கரிசனம் இருந்தாலும்...முக்கியமாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை அறிய ஆவலாய் இருக்கிறேன். யோசித்து சொல்லுங்கள்...அதற்குள் ஐஸ்வர்யாராய்க்கு கண்ணுக்கு கீழ் கருவளையம் வந்ததற்கு அனுதாபம் தெரிவித்துவிட்டு வந்துவிடுகிறேன்.
பி.கு - tamil pengal thodai என்று கூகிளில் தேடினால் என் பக்கம் வருகிறதா என்று நீங்கள் சோதித்துப் பார்த்தீர்கள் தானே? (அல்லது சோதிக்கலாம் என்று கை பரபரத்தது தானே?) :P
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad.