Monday, March 29, 2004
நாமதேவரும் கைப்பிடி சுண்டலும் - 1
பஜனை மடம் - எனக்கு போதி மரத்துக்கும் மேலே. விளையாட்டுப் போக்காய் என்னையும் அறியாமல் கற்றுக் கொண்டது அதிகம். இந்த பதிவில் கற்றுக்கொண்டதை விட "விளையாட்டுப் போக்கில்" கவனம் செலுத்தி இருக்கிறேன். பஞ்சு மிட்டாயக்கு ஆசையாய் ஏங்கும் பையன் போல மார்கழியில் ஊருக்கு போக மாட்டேனா என்று இன்னுமும் மனதின் ஓரத்தில் ஒரு ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது.
பஜனை மடம் அறிமுகமான போது பத்து வயது. நானும் கச்சேரிக்கு போகிறேன்ங்கிற மாதிரி தான் போக ஆரம்பித்தேன். தெருவில் அது ஒரு கலாச்சாரம். தெருவில் எந்த வீட்டில் எந்த சுண்டல் நன்றாக செய்வார்கள் என்று பையன்கள் கார சாரமாக விவாதிக்கும் போது நாமும் கலந்து கொள்ளவேண்டுமே என்று போக ஆரம்பித்தேன்.
பஜனை மடத்திற்கு மிக அருகில் வீடு. அங்கிருந்து பஜனை கோஷ்டி காலை 5 மணிக்கெல்லாம் கிளம்பி ஊரெல்லாம் சுற்றி எங்கள் வீடு வழியாக பஜனை மடத்திற்கு 6:30 மணிக்கு சென்றடையும். பிறகு அங்கு அரை மணி நேரம். 7 மணிக்கு முடியும்.
முதலில் கொஞ்ச நாள் காலையில் எழுந்திருக்க கஷ்டமாயிருந்த்து. ரொம்ப பழக்கம் இல்லாததால் சுண்டல் குடுக்க போகும் போது கரெக்டாக போனால் என்ன சொல்வார்களோ என்று சீக்கிரமே போய் ஜோதியில் ஐய்கியமாகி விடுவேன்.
மிளகு காரத்துடன் சூடாக நெய் மணத்துடன் வெண்பொங்கல்... ஏலக்காய், பச்சை கற்பூரம், முந்திரி பருப்பு,உலர்ந்த திராட்சை போட்டு நெய் ஒழுக கை வைக்க முடியாத சூட்டுடன் சர்கரைப் பொங்கல்... கடுகு மிளகாய் பழம் தாளித்து பெருங்காய மணத்துடன் சூடான சுண்டல்...சும்மா சொல்லக் கூடாது, மார்கழி பனியில் சூடாய் அந்த பிரசாதமெல்லாம் திவ்யமாக இருக்கும்.
ப்ரொபேஷன் பீரியட் மாதிரி சில சீனியர் பையன்கள் ரேகிங் வேறு நடக்கும். அவர்கள் வீட்டைக் கடக்கும் போது தூக்க கலக்கத்தோடு வந்து கையில் பாத்திரத்தை அடுக்குவார்கள்.
"டேய் ...ஒரு வேளை வர லேட்டாயிடுச்சுனா சுண்டல கரெக்டா வாங்கி வை..வந்து கலெக்ட் பண்ணிக்கிறேன்"
சில பேர் சொல்லிட்டு வரவே மாட்டார்கள். டோர் டெலிவரி வேறு செய்ய வேண்டும்.
சில பேர் ட்ரிங்னாமென்ட்ரி மாதிரி கொஞ்சம் குழப்புவார்கள்.
"டேய் சுண்டல் குடுத்தாங்கன்னா இதுல வாங்கு, சக்கர பொங்கல் குடுத்தா இதுல...ரெண்டும் குடுத்தா இதுல சுண்டல் இதுல சக்கர பொங்கல்"
ஒரு நாள் அதிசயமாக சுண்டல், சர்கரைப் பொங்கலுடன் பஞ்சாமிர்தம் வேறு குடுத்தார்கள். இரண்டு பாத்திரம் குடுத்தவர்களுக்கு சர்கரைப் பொங்கலும் பஞ்சாமிர்தமும் ஒரே பாத்திரத்தில் வாங்கினேன்.
"ஏன்டா பிரக்ஸ்பதி ரெண்டையும் குழப்பிட்டையேடா...ஒரு ஆல இலைய நடுவில போட தெரியாது?" - பால பாடம்.
"ஏண்டா அவன் குடுக்குற தக்னூன்டு பொங்கலுக்கு இவ்வளவு பெரிய பாத்திரம் எதுக்குடா" -கொஞ்சம் தைரியம் வந்த காலத்தில் கேள்வி கேட்டேன்.
"டேய் ...அவனே தக்னூன்டு தான்டா குடுப்பான்..ஆனா பாத்திரம் பெரிசா இருந்ததூன்னு வெச்சுக்க...இது ரொம்ப கொஞ்சமா தெரியும் ..சோ அவனே மனசு கேக்காம கூட கொஞ்சம் போடுவான்..." - உண்மையிலேயெ ஒர்க் அவுட் ஆகிற தொழில் ரகசியம்.
கொஞ்சம் ஆள் வளர வளர கவனம் வேறு திசையில் போக ஆரம்பித்தது. மொத்தம் பத்து செப்பு ஜால்ராக்கள் தான் வைத்து இருப்பார்கள். தாளம் தெரிந்தவர்கள் மட்டுமே வைத்துக் கொள்ள அனுமதி. ஜால்ராக்கள் வைத்து இருப்பவர்கள் எல்லாரும் விஷயம் தெரிந்தவர்கள் மாதிரி பந்தா விட்டுக்கொள்வார்கள்.
"இத கொஞ்சம் பிடி ..வேஷ்டி அவுந்துருத்து கட்டிக்கிறேன்.." - ஜால்ரா ஸ்டாண்ட் மாதிரி சில மாமாக்கள் உபயோகப்படுத்திக் கொள்வார்கள்.
இருந்தாலும் சந்துல சிந்து பாடிவிடுவேன்..."ஜிங்.."ன்று தப்புத் தாளமாய் எடாகூடமாய் தட்டிவிடுவேன். அவ்வளவு தான் ஸ்டாண்டு உத்தியோகமும் கொஞ்ச நாள் பறி போகும். இதென்னமோ கலெக்டர் உத்தியோகம் மாதிரி ஆலாய் பரப்பான்கள் பையன்கள்.
ட்ராயரிலிருந்து வேஷ்டி கட்டிக் கொள்கிற வயது வந்தவுடன் தான் போனால் போகிறதென்று அவசரத்துக்கு ஒதுங்கும் மாமாக்கள் ஜால்ராவை குடுப்பார்கள்.
கோலம் போடுகிற பிகருங்க வீட்டில் மட்டும் கொஞ்சம் பலமாக தட்டுவேன்.
வயதான மாமாக்கள்ல்லாம் கொஞ்ச நாளில் "ஊரெல்லாம் சுத்தி வர முடியாது...நாங்க பஜனை மடத்திற்கு நேராக வந்துடறோம்..நீங்க இளவட்டங்கள் ஊரெல்லாம் சுத்தி ஜமாய்ங்கோ.." - விபரீதம் புரியாமல் வழிவிட்டார்கள்.
இருந்தாலும் சில பெரியவர்கள் விடாமல் வருவார்கள். முழுக்க முழுக்க இளவட்டங்கள் மட்டுமே இருப்பதற்கு என்னலாம் செய்ய முடியுமோ அதெல்லாம் செய்தோம்.
சில சமயம் அவர்கள் ஈடு கொடுக்க முடியாத படி வேகமாய் ஓட்டமும் நடையுமாய் போவோம். கடைசியில் ஒன்னு ரெண்டு பேர் மட்டும் மிஞ்சினார்கள்.
"ராதிகா மனோகரா மதனகோபாலா...
தீன வஸ்தலா ஹே ராஜகோபாலா...!!"
ராதிகா, வஸ்தலா மாமி, ராஜகோபாலன் மாமா மூனு பேர் வீட்டின் முன்னாடியும் முறை வைத்து பாடுவோம். "விஸ்வநாதன் வேலை வேண்டும்" ங்கிற் ரேஞ்சுக்கு மக்களிடமிருந்து தெம்பாக சத்தம் வரும். சின்ன சின்ன சில்மிஷங்கள், ஆனால் வரம்பு மீற மாட்டோம்.
மிருதங்கம் வாசிக்க ஆரம்பித்தவுடன்...பெரிய லெவலுக்கு மரியாதை கிடைக்க ஆரம்பித்தது. முதலில் ஆர்வத்துடன் தோளில் கட்டிக் கொண்டு எல்லாரும் பார்க ஊர்வலம் வந்தேன்.
தோள் பட்டை பிஞ்சு வலி எடுத்து ரென்டு அமிர்தாஞ்சன் பாட்டில் காலி. கூட கொஞ்சம் பொங்கல் குடுக்கிறார்கள் என்று இந்த கூத்தெல்லாம் அடிக்க முடியாதென்று திரும்பவும் ஜால்ரா மாஸ்டரானேன்.
-- தொடரும்
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad.
Wednesday, March 24, 2004
கவிதெ ! கவிதெ!
பத்தாவது படிக்கும் போது பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன். பள்ளிக்கு புது தமிழ் வாத்தியார் வந்திருந்தார். இள ரத்தம். முதுகலை முடித்த கையோடு நேராக வந்திருந்தார். "மாசில் வீணையும்..." உருத் தட்டிக் கொண்டிருந்த கான்வன்டில், புதுக்கவிதையை அறிமுகப்படுத்தினார். பையன்களுக்கு ஆர்வம் வரனுமே என்று இலுப்புச்சட்டி, அல்வா துண்டம், இடுப்பு மடித்த மசால் தோசைனு பெண்ணை உருவகப்ப்டுத்தி கவிதை சொன்னார் (நல்ல கவிதை..ஆனா நியாபகம் இல்லை). பசங்கோஸ்..உருவகம், கவிதை நடை இதெல்லாம் விட்டு விட்டு அடிக்கடி "மசால் தோசை கவிதை சொல்லுங்க சார்"னு அரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அவர் சொன்ன கவிதைகளெல்லாம் நன்றாக இருந்தது. அதோடு பேச்சுப் போட்டிக்கெல்லாம் வேறு மேற்கோள் காட்டி பேசியதிலிருந்து கொஞ்சம் பாதிப்பு. பத்தாங் கிளாசில் படித்துக் கொண்டு பதினோராம் கிளாஸ் பொண்ண வேறு ரூட் விட்டுக் கொண்டிருந்தேன். எல்லாமாக சேர்ந்து என்னமோ பண்ணி வெத்து பேப்ப்ரை வெட்டி சின்ன புஸ்தகம் மாதிரி செய்தேன். முதலில் எதுகை மோனையாக வார்த்தையெல்லாம் எழுதி வைச்சுப்போம் கவிதை எழுத உபயோகமாய் இருக்கும் என்று எழுத ஆரம்பித்தேன்.
"வெந்நீர், பன்னீர், காலை,மாலை, வேலை, வெங்காயம், பெருங்காயம், கருப்பு, பருப்பு..." கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது.
மாமா எங்கிருந்தோ வந்தார். "ஒரு பேப்பரும் பேனாவும் தா...அதோ அந்த மாதிரி நீளமா வேனும் அத தா ஒரு பேப்பர் கிழிச்சுண்டு தரேன்"னு வாங்கிக் கொண்டார்.
வாங்கினவர் என்ன எழுதிருக்கேன்னு முனு முனுவென்று வாசிக்க ஆரம்பித்தார்.
"பலசரக்கு லிஸ்ட் எழுதனும் அட இது கூட உபயோகமாய் இருக்கும் போல" என்று வேண்டாததை அடித்து விட்டு வேணுங்கறதுக்கு பக்கதில் அரை கிலோ, ஒரு கிலோனு திருத்த அரம்பித்துவிட்டார்.
பலசரக்கு ஐட்டத்தையெல்லாம் தவிர்த்து புது லிஸ்ட் எழுத ஆரம்பித்தேன். நான் 'கவிதெ' எழுத முயற்சிக்கிறேன்னு மோப்பம் பிடிச்சு ஒரு நண்பன் வந்தான்.
"டேய் அத இப்பிடி கொண்டா பாப்போம்" பிடுங்கி வாசிக்க ஆரம்பித்தான். சிறிதும் பெரிதுமாய் வரிக்கு ஒரு வார்த்தை இருந்தது லிஸ்ட்டில்.
"அட நல்லா இருக்குடா...இது தான் கவிதையா...."
அட ராமா....மண்டையில அடிச்சுக்காத குறை தான்.
அதுக்கப்புறம் கெக்க பிக்கென்னு என்னமோ எழுதி வாத்தியாரிடம் காண்பித்தேன். ஐய்யோ பாவமேனு திருத்த ஆரம்பித்து திரும்பவும் முழுவதையும் எழுதிக் கொடுத்தார்.
இப்ப தான் கவிஞர்களெல்லாம் "வசந்த் அண்ட் கோ" ஓனர் மாதிரி கோட் சூட்லாம் போட்டுக் கொண்டு ஷோக்காய் இருக்கிறார்கள். அப்போலாம் நான் பார்த்த கவிஞர்களெல்லாம் தாடி வைத்துக்கொண்டு, ஜிப்பா போட்டுக் கொண்டு சோடா புட்டி அனிந்திருந்தார்கள். சரி இதெல்லாம் நமக்கெதுக்குனு அப்புறம் கவிதெ எழுதவே இல்லை. உண்மை என்னவென்றால் 'கவிதெ' ரொம்ப வரலை.
ஏ பி சி டி எங்கப்பன் தாடி
ஓ பி சி டி உங்கப்பன் தாடி
இதைத் தாண்டி "மாசறு பொன்னே...வலம்புரி முத்தே...." எழுத நிறைய பேர் இருந்த்தால் வேறு ஜோலி பார்க்க போய்விட்டேன்.
ஆனா காலேஜில் நெருங்கிய நண்பன் கவிதையெல்லாம் எழுதுவான். அடிக்கடி ப்பீலிங் ஆகி மோட்டுவளையத்தை பார்ப்பான். கிழிச்சு போட்ட டிக்கெட்டை கூட விட மாட்டான் கவிதை எழுத ஆரம்பிட்துவிடுவான். லெட்டரில் மாய்ஞ்சு மாய்ஞ்சு "கவிதெ" எழுதி அனுப்புவான்.(எனக்கு தான். மேற்படி கிட்டலாம் சொல்ல தில் இல்லெ) "இதெல்லாம் அப்பிடியே வரது தான் இல்ல?"னு நக்கல் விட்டாலும் கோபித்துக் கொள்ள மாட்டான்.
காதலுக்கும் கத்திரிக்காய்க்கும் சம்பந்தம் இருக்கோ இல்லையோ...கவிதைக்கு சம்பந்தம் இருக்குங்கற மாதிரி அடிக்கடி உணர்சிவசப்படுவான். ஜலதோஷம் பிடித்த மாதிரி மூக்கால் பாட்டெல்லாம் பாடுவான். காதல் வியாதியா இல்லை கவிதை வியாதியா கண்டுபிடிக்கவில்லை.
நானும் ஒரு "கவிதெ" லெட்டரில் எழுதி அனுப்பினேன்
மானே..தேனே..பேனே
கண்ணே பொண்ணே...புண்ணே
அன்பே கரும்பே...இரும்பே
அன்னமே
ஒன்றரை லிட்டர் கிண்ணமே
கவிதை கவிதை
ஓ
நானும் காதலிக்கிறேனோ !!
ம்ஹூஹூம் அன்னிக்கு காணாம போனவன் தான் அதுக்கப்புறம் அவனிடமிருந்து பதிலே.....வரவில்லை
பின்குறிப்பு - ஐய்யா இதில் கவிதையையோ நிஜ கவிஞர்களையோ கேலி செய்யலை. நிஜ கவிஞர்கள் படித்தீர்களானால் கோச்சுக்காத சாமி சொல்லிபுட்டேன் ஆமா.
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad.
Thursday, March 18, 2004
புயலொன்று புஸ்வானமான கதை - 2
போட்டோவை பார்ததும் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்த்து.
"ஏங்க சுமாரா தாங்க வந்திருக்கு"
முறைத்துக் கொண்டே மேலிருந்து கீழ் பார்வையுடன் "இருக்கறது தான் வரும்"-எதிர் பார்த்த பதில் தான் கிடைத்தது.
"இந்த டப்பா கேமராக்கே மனசுல அவனுக்கு என்னமோ பி.சி.ஸ்ரிராம்னு நினைப்பு இங்க வந்திருக்கவே கூடாது" எனக்கு நானே மனசுக்குள் சொல்லிக் கொண்டேன்.
போட்டோவுடன் குறிப்பு அனுப்ப வேண்டுமே. "இந்த கதையை படித்து நாலு பேர் யோசித்தால் ரொம்ப சந்தோஷப் படுவேன். சமுதாயம் உருப்படனும், மக்கள் மாற வேண்டும் ஆனை பூனை..அம்பத்திரெண்டு...மொத்தத்தில் "இந்தியா ஒளிர வேண்டும்" என்று ஒரே பேத்தல்.
இரண்டு வாரம் கழித்து பத்திரிக்கையில் முடிவு வெளியாகியது. என் பேரை தேடித் தான் கண்டு பிடிக்க வேண்டியிருந்தது. என்னை மாதிரி யாரும் தேடி கண்டுபிடித்ததாக தெரியவில்லை.
என்னடா உலகம் இதுனு இருந்தது. இருக்கட்டும் என் போட்டோவும் கதையும் வரட்டும் ..அப்போ வெச்சுக்கறேன்.
அது வார பத்திரிக்கை...வாரா வாரம் ஞாயிற்றுக் கிழமை எப்போடா வரும் ஆவலோடு காத்திருக்கலானேன். பால்காரன் வந்தார், வேலைக்காரி வந்தார், பேப்பர் வந்தது, பத்திரிக்கை வந்தது ஆனா என் போட்டோவும் கதையும் மட்டும் வரவே இல்லை.
"ஏய் உன் போட்டோ வந்திருக்குடா..."
"எங்கேடா எங்கேடா?"
"ம்ம்ம் இங்கேடா "....யாரோ மண்டையை போட்டதுக்கு வருந்தி வந்திருந்தை காட்டி நக்கல் விட்டார்கள்.
"டேய் வேண்டாம்...இருக்கற எரிச்சலில் அடிச்சேனா நாளைக்கு உன் போட்டோ வந்திரும் அந்த இடத்துல ஓடிப் போயிருடா"
அப்புறம் என்னவேனா ஆகட்டும்னு அந்த பத்திரிக்கையை கொஞ்சம் நாள் பார்க்கவே இல்லை. ஒரு நாள், சுகமாக தூக்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு அப்பா பேப்பரும் கையுமாக எழுப்பினார்.
"டேய் வேற நல்ல போட்டோ ஏதாவது குடுக்க கூடாதாடா..."
அடிச்சு புரண்டு எழுந்திருந்தேன். ஹீ...ஹீ போட்டோவுடன் ..கதாசிரியர் இங்கு இன்ன படிக்கிறார்...ரொம்ப சிறந்த தேசபக்தி உடையவர்னு குறிப்பு வேறு. எனக்கே ரொம்ப வெட்கமாக இருந்தது. சும்மாவே இவனுங்க ஓட்டறதுக்கு குறைச்சல் இல்லை இதுல இது வேறயா, என்ன சொல்லி சமாளிக்கலாம்னு ஒரே யோசனை.
"என்ன மாமா உங்க பையனோட போட்டோ பத்திரிக்கைல வந்திருக்கு போல...கதை ரொம்ப நன்னாயிருக்கு" ஒரு ஜிகிடியின் தோப்பனார் சர்டிபிகேட் கொடுத்தார்.
"மாமா உங்க பொண்ணுகிட்டயும் அப்பிடியே சொல்லுங்கோ அவ பக்கதாத்த்து பொண்ணு கிட்டயும் சொல்லச் சொல்லுங்கோ" மனசுக்குளிருந்த மைனர் குரல் குடுத்தார்.
காலங்கார்தாலேயே குளித்து உம்மாச்சியெல்லாம் கும்பிட்டுவிட்டு, எங்கேயோ போவது போல் சும்மா தெருவில் கிழக்கும் மேற்குமாக நாலு தரம் நடந்தேன்.
சும்மாவே வம்படிக்கும் தெருவில் ...விஷயம் அதற்குள் பரவி இருந்தது.
"ரமேஷண்ணா உங்க போட்டோ இன்னிக்கு பத்ரிக்கையில வந்திருக்கு" ஒரு சின்ன பெண் சொன்ன போது .."இதெல்லாம் என்னோட அரசியல் வாழ்கையில ரொம்ப சகஜமப்பா.."ங்கற மாதிரி லுக்கு விட்டேன்.
ஒரு பெரிய வக்கீல் நண்பர்களோடு அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்.
"அம்பி இங்க வா" என்று கூப்பிட்டு ..."எனக்கு தெரிஞ்ச பையன் தான் ...கதையெல்லாம் எழுதுவார்..பெரிய எழுத்தாளர்..இன்னிக்கு பத்ரிகையில கூட போட்டோலாம் வந்திருக்கு" என்று குண்டைத் தூக்கி போட்டார்.
எழுத்தாளரா? அதுவும் பெரிய எழுத்தாளரா...சர்தான் வக்கீல் கண்டிப்பா ஏதோ வம்புல மாட்டி விட போறார்..மனதில் பல்பு எரிஞ்சுது. ஒருவேளை பொய் சாட்சி சொல்ல கூப்பிடுவாரோ...? விடு ஜூட் ஓட்டம் பிடித்தேன்.
இப்பிடியாக சுத்துப்பட்டியில் பரவி இருந்த நம்ம எழுத்துப் புகழ் காலேஜுக்கு இடம் பெயர்ந்த்து.
எதுடா சாக்குனு நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு காத்திருந்த பஞ்சத்துக்கு பொறந்த பயல்கள்...ட்ரீட்னு சொல்லிக் கொண்டு பக்கத்திலிருந்த ஹோட்டலுக்கு கூட்டிக் கொண்டு போனார்கள்.
விட்டால் ஆளையே அடித்து சாப்பிடுகிற காட்டான்களுக்கு, அசைவம் குடுத்து கட்டுப்படியாகதென்று வேறு வழியில்லாமல் நல்ல சைவ ஹோட்டலுக்கு கூட்டி போனேன். போன ஜென்மத்தில் ஹோட்டல்காரர்க்கு நிறைய கடன் வெச்சிருப்பேன் போல...நாலைந்து மாதங்களுக்கு சேர்த்தே தாராளாமாய் பாத்தி கட்டி குழைத்துக் அடித்துக் கொண்டிருந்தார்கள் என் தளபதிகள்.
"ஏன்டா நீ சாப்பிடலை?" எவனோ ஒருவன் போனால் போகிறதென்று கேட்டான்.
"அவனுக்கு நல்ல மனசுடா நாம சாப்பிடறத பார்த்தே மனசும் வயிறும் நிறைஞ்சிருக்கும்" - ராமநாரயணன் படத்து செண்டி டயலாக் வேறு இதில்.
எல்லாம் முடிந்து பில்லை குடுத்துவிட்டு பார்த்ததில்..பரிசாக வந்திருந்த பணத்தில் காலணா மிஞ்சியது.
இனிமேல் இது மாதிரி விஷயமெல்லாம் இந்த புண்யவான்கள் காதிற்கு எட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் - கண்ணை பிடுங்கிய பின் சூர்ய நமஸ்காரமும் சபதமும் பண்ணினேன்.
ஏப்பம் விட்டுக் கொண்டே நமுட்டுச் சிரிப்பு சிரித்தார்கள். ஏதோ சொல்ல வந்தது போல் தெரிந்தது.
"ஏன்டா மனுசணை கலங்க அடிக்கிறீங்க ...விஷயத்தை சொல்லுங்கடா..."
"எல்லாம் சரிடா...எங்களுக்கெல்லாம் ஒரு சந்தேகம்...உங்க வீட்ல வெச்சுருக்கியே ஒரு தண்டி இங்கிலீஸ் புஸ்தகம்...நீ அத பார்த்து உல்டா பண்ணி இந்த கதையை எழுதினியா? இல்ல வேறெதாச்சும் வைச்சு இத உஷார் பண்ணினயா?..சொன்னா நாங்களும் எழுதி உனக்கு ட்ரீட் குடுப்போம்ல..."
"டொம்"ன்று ஒரு சத்தம்...என் இதயம் தான் வெடித்தது...முன்னால் செய்த சபதத்தை கேன்சல் செய்து விட்டு ...இனிமேல் கதையே எழுத கூடாதுனு சபதம் செய்தேன்.
டமில் உலகதிற்கு எவ்வளவு நஷ்டம்....நானும் அகநானூறு மாதிரி நிறைய லேகியமெல்லாம் எழுதி இருப்பேன்...ஹும்ம்ம்ம்ம்ம்
பின் குறிப்பு - தலைப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிப்பவர்களுக்கு - ஆஞ்சனேயா படத்திற்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்? ...இதெல்லாம் பெரிய மனசு பண்ணி கிளறாதீங்க...:)
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad.
Wednesday, March 17, 2004
புயலொன்று புஸ்வானமான கதை
"கோந்தே நோக்கு ஏதோ மணியாடர் தபால் வந்திருக்காம்"
"தபாலா? மணியாடரா? நேக்கா? " க்ரோர்பதி அமிதாபச்சன் மாதிரி மூன்று தரம் கேட்டதில் மாமியே குழம்பி போனாள்.
"ஆமாம் அம்பி உமக்குத் தான்..வாரும்" வாசலில் இருந்து தபால்காரர் உரிமையோடு விளித்தார்.
"என்ன அம்பி பத்திரிகைக்கெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீர் போல" விட்டால் போஸ்டர் அடித்து விடுகிற ரேஞ்சில் தபால்காரர் சவுண்டு குடுத்ததில் பக்கத்தாத்து ராஜாமணி கோவணம் அவுந்தா கூட தெரியாத வேகத்தில் ஓடி வந்தான்.
"இந்தாரும்" என்று 75 ரூபாயும் மணியாடர் குறிப்பையையும் கையில் திணித்து விட்டு, என்னமோ கைக் காசை போட்டுக் குடுத்த தோரணையில் பக்கத்து வீட்டுக்கு பெருமை பேச போய்விட்டார்.
கதை எப்பவோ வெளி வந்தது, லேட்டா பணம் அனுப்புவதற்கு மன்னிக்கச் சொல்லி குறிப்பு இருந்தது.
பின்னாலிருந்து எட்டிப் பார்த்தே படித்துவிட்டான் ராஜாமணி.
"எலேய் ரமேஷு (நானே தான்) பெரிய ஆளாயிட்ட எங்களையும் கவனிச்சுக்கோ " நான் என்னமோ அப்துல்கலாம் மாதிரி மனு குடுத்தான்.
நான் இன்னமும் விளக்கெண்ணை குடித்த மாதிரி 'ஙே'ன்னு முழித்துக் கொண்டிருந்தேன்.
அப்போ புரியவில்லை, சாயங்கலாம் தான் புரிந்தது. தெரு கிரிக்கெட் டீம் நிதிக்கு எல்லாரையும் விட கூட கொஞ்சம் கறந்து விட்டான்.
"எதை எழுதினாலும் சமூக பிரக்ஜையோடு எழுது" மாமா அவர் பங்குக்கு அள்ளி விட்டுக் கொண்டிருந்த பொழுது தெருவில் இருக்கும் சொல்ப பிகருகளில் யாரவது இதை பார்திருக்க மாட்டார்களா என்று கவலை பட்டுக் கொண்டிருந்தேன்.
"ராஜாமணி இதைப் பற்றி நாலு பேரிடம் சொன்னால் உனக்கு 50 பைசா போடுகிறேன்" தெரு பிள்ளயாரிடம் மனமுருக பிரார்த்தித்தேன்.
இருந்தாலும் பிள்ளையாரை நம்பாமல், கல்யாண பத்திரிகை தவிர வேறெந்த பத்திரிகையும் வாங்காத பிக்ர்களின் வீட்டுக்கெல்லாம் போய் "உங்காத்துல இந்த வாரம் இந்த பத்திரிகை வாங்கினேளா?"ன்னு சும்மானாச்சுக்கும் கேட்டேன்.
அதனாலோ என்னமோ ராஜாமணியும் பிள்ளையாரும் கைவிட்டு விட்டார்கள். பண்ணின பப்ளிசிட்டி ஸ்ட்ண்ட் எல்லாம் பிளாப் ஆகியது.
கொஞ்ச நாளில் மனம் தேறிய போது கண்ணில் பட்டது அந்த பத்திரிகை விளம்பரம். மிகவும் பிரபலமான "சிறுகதை போட்டி". ஏற்கனவே நிறைய கேள்வி பட்டிருக்கேன். சரி முயற்சி பண்ணித்தான்
பார்கலாமே மனம் சபலப் பட்டது.
பாரதிராஜா படத்தில் வருகிற பெரிய எழுத்தாளர் மாதிரி ஆத்தங்கரைக்கு போய் பச்சை பசேலென்று இருக்கும் வயலைப் பார்த்துக் கொண்டு எழுதலாமென்று கிளம்பி போனேன். வெறுமென தலையை சொறிந்து கொண்டு பராக்க பார்த்துவிட்டு வெத்து பேப்பரோடு திரும்பி வந்தேன்.
இதெல்லாம் வேலைக்காகாது என்று நாட்டுப்பற்றை கருவாக வைத்துக் கொண்டு பாதி ராத்திரி ஒரு வழியாக எழுதி முடித்தேன்.
கோழி கிறுக்கலை எல்லாம் திரும்பி கூட பார்க்கமாட்டார்கள் என்று அக்காவிடம் குரங்குக் கூத்தெல்லாம் ஆடிக் காட்டி பிரதி எழுதி வாங்கி அனுப்பினேன்.அனுப்பி ஒரு மாதம் ஆனதிலிருந்து தபால்காரரை தொல்லை பண்ண ஆரம்பித்தேன். அதிலிருந்து என்னமோ சல்மான்கானைப் பார்த்த ஐஸ்வர்யா ராய் மாதிரி என்னை பார்த்தாலே ஓடி ஒளிய ஆரம்பித்தார்.
மனசுக்கு பிடிச்ச பெண்ணிடம் விளையாட வேண்டிய விளையாட்டையெல்லாம் இந்த பெருசுடன் விளையாட வேண்டி இருக்கேனு நொந்து நூடூல்ஸ் ஆனது தான் மிச்சம்.
சரி அம்புட்டு தான்! புட்டுகிச்சு போலனு கை கழுவின சமயம் அந்த லெட்டர் வந்தது,
"மொத்தம் ஆராயிரத்துக்கும் மேலே பேர் கலந்து கொண்டதால் முடிவு அறிவிப்பதில் தாமதமானது, முதல் மூன்று பரிசுகள் போக, மிச்சம் ஏழு ஆறுதல் பரிசு கதைகளில் உங்கள் கதையும் தேர்வாகி
இருக்கிறது. உங்களைப் பற்றிய குறிப்புடன் புகைப்படத்தையும் அனுப்பவும்"
அம்புட்டுத்தான்....சலங்கை ஒலி கமலஹாசன் மாதிரி பிள்ளையார் முன்னாடி "ஜிங் ஜிங்னு" ஆட வேண்டும் போல இருந்தது. ஒரு வேளை ஜெயப்பிரதா பக்கத்தில் இருந்திருந்தால் ஆடி இருப்பேனோ என்னவோ.
இருந்த பழைய போட்டோவில் எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை...ம்ஹும் இந்த முறையும் சந்தர்பத்தை நழுவ விடக் கூடாது.
மாமியிடமிருந்து பத்து ரூபாய் வாங்கி பவுடரெல்லாம் போட்டுக் கொண்டு போட்டோ எடுத்துக் கொண்டேன்.
--- தொடரும்
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad.
Monday, March 15, 2004
முக்கிய அறிவிப்பு
தமிழ் வட்டத்தை கொஞ்சம் சுற்றி வந்ததில் கொஞ்சமில்லை நிறையவே பயமாக இருக்கிறது. சுப்பன் சொன்னது சப்புனு இருக்கு, குப்பன் எழுதுவது குப்பைங்கிற ரேஞ்சுக்கு நிறைய இடத்தில் அடிதடி. சில இடத்தில் அவார்டு படம் பார்க்கிற மாதிரி என்ன பேசுகிறார்கள் என்று புரியவில்லை ஆனால் அங்கே வெட்டு குத்துனு ரத்தம் சொட்டுதுனு மட்டும் தெரியுது.
(எங்கே என்ன பார்த்தேனு கேக்காதீங்க கண்டிப்பா சொல்ல மாட்டேன்)
ஆகையால் என் மண்டையை யாரவது பொளக்கறதுக்கு முன்னாடி
பெருமதிப்புற்குரிய பெரியோர்களே, தாய்மார்களே, குழைந்தைகளே, இலக்கியவாதிகளே,
நான் எதோ தெரியாம இத ஆரம்பித்துவிட்டேன். இலக்கியம்ங்கற வார்த்தைக்கும் இந்த பக்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இலக்கணம் வாத்தியார் சொல்லி குடுத்த போது பராக்க பார்த்த பார்டி நான். நேர்மா,நிறைமா, புளிமா எல்லாம் சொல்லும் போது தோசைமாவை நினைத்து ஏங்கிக் கனவு கண்டுகொண்டிருந்ததால் மண்டையில் ஏறவில்லை. எனக்கு இலக்கணம் எல்லாம் இந்த லட்சணம் தான்.சுத்த தமிழும் ரொம்ப வரல ஆனா முயற்சி பண்ணறேன். எங்கேயாவது தவறு இருந்தால் பெரிய மனசு பண்ணி மன்னிச்சுடுங்க. இல்ல அடிக்கனும்னு முடிவு பண்ணிடீங்கனா எல்லார் முன்னாடியும் மானத்த வாங்காம தனியா கூப்பிட்டு மரியாதை செஞ்சீங்கன்னா சத்தம் போடாம வாங்கிக்கறேன்.
நீங்க யாரும் கஷ்டப்ப்ட வேண்டாம், நானே சொல்லிடறேன் - நான் எழுதுவது எல்லாம் குப்பை குப்பையை தவிர வேறொன்றும் இல்லை. அம்புட்டுத்தேன் .
இப்படிக்கு
ஒன்னுமே தெரியாத டுபுக்கு.
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad.
Thursday, March 11, 2004
ஸ்டார்ட் ஆக்க்ஷன் கேமரா
"திவ்ய பாரதி முதன் முதலில் நடித்த காட்சி எங்க ஊரில் தான் படம் பிடித்தார்கள் தெரியுமா?" என்று மெட்ராஸ் நண்பனிடம் சொன்னேன்.
"அதான் மாடியிலேர்ந்து விழுந்து தற்கொலை பண்ணிக்கிட்டாங்களா?"
அப்புறம் நான் கப்சிப்.
மணிரத்னமின் "ரோஜா"
"சுந்தரபாண்டியபுரம், திருநெல்வேலி மாவட்டம்"
தியேடரில் எழுத்து போட்டவுடனேயே நரம்பெல்லாம் புடைக்க "உய்ங்ங்ங்ங்"ன்று விசிலடித்தேன்.
"சரியான காட்டானுங்க....படத்துல ஏற்கனவே ஒரு இழவும் கேக்க மாட்டேங்கு இதில விசில் வேற...போவேண்டிதானே அப்பிடியே...வந்துட்டானுங்க சினிமா பார்க்க..." முன் சீட்டில் இருந்த பெருசு சவுன்டு குடுத்தது. ஊர் மோகம் அவ்வளவாக இல்லை போல. அது தான் முதன் முதலில் சினிமாவில் ஜில்லா பேரை பார்த்த நியாபகம்.
அப்புறம் வெள்ளை பணியாரம் கேட்பாரே ஒரு சீனில், அப்போ ம்துபாலா ஒரு ஊரை பத்தி சொல்லுவார், அது அம்பாசமுத்திரம் பற்றி தான். திரும்பவும் விசில் அடித்தால் முன்சீட் பெருசு குடுத்த காசுக்கு படம் புரியாத கோவத்தில் என் மண்டையில் ஒரு போடு போட்டுவிடுவாரோன்று பயந்து வெறுமனே கையை தட்டினேன்.வேறு நிறைய பேர் விசில் அடித்தார்கள்.
அப்புறம் "புது நெல்லு புது நாத்து"பட ஷூட்டிங்கிற்காக ஒரு பெரிய படையே வந்து இறங்கியது. படம் முழுவதையும் எங்க ஊரில் எடுத்தார்கள். கூட்டம் தேவைப்பட்ட சீனுக்கு நிறைய பேரை கூட்டி போனார்கள்.உள்ளூர் பைய்யன் ஒருவன் நடித்தான். இரண்டு கிழடுகள் வேறு வசனம் பேசியது. வேறு சிலர் கேமரா முன் ஊமையாக நடித்து விட்டு ..."இதென்னயா பிரமாதம்..அந்த காலத்துல நாங்க நடிக்காத நடிப்பா.." என்று ஊருக்குள் வேறு வந்து நடித்தார்கள். வேறு எந்த ஊரில் இந்த படம் ஓடியதோ இல்லையோ எஙக ஊரில் நன்றாக ஓடியது.
அப்புறம் "ஆத்மா". இந்த படத்திற்காக பக்கத்திலுள்ள தென்பொதிகை மலையில் அற்புதமாக ஒரு கோயில் செட் போட்டார்கள். ஊரெல்லாம் அதே பேச்சாயிற்று. நண்டு சிண்டுகளிலுருந்து கிழடு கட்டைகள் வரை எல்லாரும் வேன் வைத்துக் கொண்டு போய் பார்த்தார்கள்.
ஒரு குடு குடு தாத்தா என்னை பிடித்துக்கொண்டார்,
"ஏண்டா அத்தையம்மான்னு ஒரு படம் எடுக்கறாளாமே, கோவில்லாம் கட்டிருக்காளாமே...நீ பாத்தியோ?"
"கிழிஞ்சுது போ ...தாத்தா அது அத்தையம்மாவும் இல்லை சொத்தையம்மாவும் இல்லை ஆத்மா தாத்தா ஆத்மா !"
"என்ன ...மா??"
"ம்ம்ம் பொன்னம்மா...கொஞ்சம் இருங்கோ இதோ வந்துடறேன்."
அப்புறம் குட்டி குட்டியாய் நிறைய படங்களுக்கு பிறகு ஷங்கரின் "ஜென்டில் மேன்" வந்தார். எங்களுரிலும் பக்கத்தூர் கல்லிடைக்குறிச்சியிலும் படப்பிடிப்பு நடந்தது. வெளிஊரிலிருந்து
நேர்த்திக்கடன் செலுத்த மாமா ஒருவர் வந்திருந்தார். கோவிலுக்கு போகிற வழியில் கூட்டமான கூட்டத்துடன் மனோரமா இறந்த காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார்கள், பாடை பக்கத்தில் அர்ஜுன் அழுது வசனம் பேசும் காட்சி. கூடுதல் எபெக்ட்டுக்காக தீயணைக்கும் வண்டிகளை வைத்து மழை பெய்ய வைத்திருந்தார்கள்.
கோவிலுக்கு நிலை மாலை போடபோகிற வழியில் இதென்ன பாடையை பார்க்க வேண்டியிருக்கிறதே என்று மாமா முகம் சுழித்தார், மாமிக்கோ படப்பிடிப்பை நின்று பார்க்க ஆசை.
"சித்த நில்லுங்கோ, பெருமாள் எங்கயும் போயிடமாட்டார் ! ரெண்டு நிமிஷத்துல போயிடலாம்."
டேக் மேல டேக் வாங்க ரெண்டு நிமிஷம் இருபது நிமிஷமாயிற்று. மாமா பரபரத்து ஒரு வழியாக கோவிலுக்கு போனால் பட்டரை காணோம்.
அங்க ஷூட்டிங்குக்கு போய் பாருங்க சாமி, பாடைக்கு பின்னால் நின்னு நல்லா ஜோரா போஸ் குடுத்துக்கிட்டு நிப்பாரு - வாட்ச்சுமேனுக்கு அவர் ஷூட்டிங் பார்க்கமுடியவில்லையே என்று வருத்தம்.
அடப்பாவி மனுஷா என்று ஆரம்பித்த ஸ்லோகம் பட்டர் வரும் வரை மாமி வாயில் முனுமுனுத்தது.
"என்ன மாமி இங்க நிக்கறதுக்கு அங்க வந்து நின்னுருந்தா சினிமாவிலாவது வந்திருப்பேளே"- பட்டர் தம் பங்குக்கு நேரம் காலம் தெரியாமல் எண்ணெய்யை விட்டார். ஆனால் மாமா அதை ரசிக்கவில்லை. குடுக்க வைத்திருந்த தக்ஷினையை பாதியாக குறைத்துவிட்டார்.
படத்தில் நல்ல தெரியும் படி விழுந்தவர் "ஜென்டில் மேன்" மாமாவானார்.
இன்னொரு படத்துக்கு வந்து எல்லா மாமிகளையும் மடிசார் கட்டிக் கொண்டு குடையை பிடித்துக் கொண்டு நடக்க விட்டார்கள். ஆளுக்கு அம்பது ரூபாயும் கிடைத்தது.
அதுக்கப்புறம் "பாரதி" போன்ற நல்ல படங்கள் உட்பட ஏகப்பட்ட மெகா சீரியல்களும் வர ஆரம்பித்தன. இப்போதெல்லாம் சுத்துபட்டியில் ஷுட்டிங் நடக்காத நாட்கள் தான் கம்மி. "அட ஷூட்டிங் தானே..." என்று மக்களும் இப்போதெல்லாம் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை.
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad.
Thursday, March 04, 2004
ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும்
"பாட்டையா" நரைத்த முடி, பஞ்சடைந்த கண்கள், ஒல்லியான தேகம். அழுக்கு வேட்டி தான் கட்டி இருப்பார். சட்டையில் ஒரு ஊக்கு மாட்டி இருப்பார். ஒரு பித்தான் இருக்காது. முதன் முதலாக இவரை பார்த்த போது எனக்கு வயது 12 இருக்க்கும். நூலகத்தில் புஸ்தகங்களை அடுக்குவது, டீ வாங்கி கொடுப்பது, கேட்கும் போது உள்ளே இருந்து பழைய பேப்பர்களை எடுத்து தருவது போன்ற வேலைகள் செய்து வந்தார். வயது அறுபதுக்கு மேல் இருக்கும். அடிக்கடி தனக்கு தானே பேசிக்கொள்வார்.
"பஞ்ச தந்திர கதைகள் எங்கு இருக்கும்?"
"பஞ்சாங்கமெல்லாம் இங்க கிடையாது போய் உங்க பஜனை மடத்துல கேளு கிடைக்கும்"
பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சிரித்தார்கள். எனக்கு எரிச்சலுடன் வெட்கமாகவும் இருந்தது. அதுதான் அவருடன் நடந்த முதல் சம்பாஷனை. அப்புறம் அவரைப் பற்றி தெரியுமாகையால் ரொம்ப பேச்சு குடுக்க மாட்டேன்.
"யோவ் பாட்டையா அங்கென்ன மயிர புடுங்குதீரா? இந்த புஸ்தகத்தையெல்லாம் எடுத்து அடுக்கும்வே" உதவி நூலகரிடமிருந்து அடிக்கடி அர்சனை விழும் அவருக்கு.
பெரிய நூலகர் அவ்வளவு அடிக்கடி திட்ட மாட்டார். ஆனால் அவரிடமிருந்தும் அவ்வப்போது விழும்.
"டீல என்னவே எதோ மொதக்குது?"
பாட்டையா என்னவோ முனகினார். அவ்வளவு தான் நூலகர் எழுந்து வந்து மண்டையில் ஒங்கி அடித்து விட்டார். நானும் இரண்டு பேரும் பார்த்துக் கொண்டிருந்தோம். என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எழுந்து போய் விட்டேன்.
ஆனால் பாட்டையாவோ ஒன்றும் நடக்காத மாதிரி டீயை மாத்திக் கொண்டிருந்தார்.
"எவன் கேக்கிறது இவங்கள,இவங்களுக்கெல்லாம் நல்ல சாவே கிடையாது" பார்த்துக் கொண்டிருந்த இன்னொருவர் வெளியில் வந்து புலம்பினார்.
இன்னொரு நாள் நூலகத்திற்கு சென்ற பொழுது பாட்டையாவிற்கு அர்சனை விழுந்து கொண்டிருந்தது.
"செத்த மூதி உன்னய அன்னிக்கே அத இடத்த மாத்த சொன்னேம்ல ஏம்வே செய்யல? இப்போ பாரும் அவ்வளவும் கரையான் புடிச்சிட்டு. எவன் தண்டம் கட்டுவான் இதுக்கு? உமக்கு இந்த மாசம் சம்பளம் கைக்கு வந்த மாதிரி தான். உம்ம சோலிக்கு வேட்டு வெச்சா தாம்வே இது சரியா வரும்"
பாட்டையா அன்றைக்கு எதோ பதில் சொன்னார். உதவி நூலகர் உர்ரென்று இருந்தார். சிறிது நேரத்தில் கொஞ்சம் கூட்டம் குறைந்த நேரத்தில் ஒரு புஸ்தக அலமாரி பின்னாலிருந்து பாட்டையாவை கூப்பிட்டார். "தம் திம்" என்று கொஞ்ச நேரம் சத்தம் வந்தது. மடித்து கட்டிய வேடியோடு உதவி நூலகர் முதலில் வந்தார். பிறகு பாட்டையா. கலைந்த தலை முடி, சட்டை பித்தான் பிய்ந்து கொஞ்சம் திறந்த சட்டை. கண்ணில் திரண்ட கண்ணீர். உள்ளே என்ன நடந்திருக்கும் என ஊகிக்க முடிந்தது.
எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
"உம்ம பேத்தி வந்தாச்சு...போய் தூக்கு சட்டிய வாங்கி வந்து கொட்டிக்கிடும் வேளா வேளைக்கு அது மட்டும் நல்ல நட்க்கட்டும்"
பாட்டையா சட்டையை சரி செய்து கொண்டு போனார். எனக்கு அதற்கு மேல் அங்கு இருகக பிடிக்கவில்லை. நானும் கிளம்பினேன்.
"தாத்தா புது பாவாடை எப்போ தாத்தா வாங்கியாருவ?" கடந்து செல்லும் போது அவர் பேத்தி கேட்டுக் கொண்டிருந்தாள்.
நான் படிக்காத "ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும்" நாவலின் தலைப்பு தான் நியாபகத்துக்கு வரும் - இதை நினைக்கும் போதெல்லாம் .
பின் குறிப்பு - சில எருமை மாடுகளும்- மா இல்லை நான்கு எருமை மாடுகளும்-மா என்று சரியாக நினைவில்லை.
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad.