<$BlogRSDUrl$>

Thursday, June 02, 2005

அம்மாவசை 

நலம் நலமறிய ஆவல்.
அம்மாவசை வருவதற்கு நீண்ட இடைவெளியாகிவிட்டது. (புரியாதவர்களுக்கு - முந்தைய பதிவிற்கும் இந்த பதிவிற்குமான இடைவெளியைப் பற்றிச் சொன்னேன். ஆடிக்கொருதரம் அம்மாவாசைக்கொருதரம் பதிவு செய்யும் ரகமாகிவிட்டேன்). இடையில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்வுகள். வேலை வேறு மாறுகிறேன். அதனால் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இதே மந்த நிலை தொடரும் என்று நினைக்கிறேன். கிடைக்கும் சந்தர்பத்திலெல்லாம் எட்டிப் பார்க்கிறேன். என்னை மாதிரி வலை உலகில் நிறையபேர் காணாமல் போன மாதிரி தெரிகிறது. நிறைய விஷயங்களைப் பற்றிப் பதிய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எல்லாம் புஸ்ஸ்...இப்போதைக்கு சமீபத்தில் பார்த்த சில படங்களைப் பற்றி...

மும்பை எக்ஸ்பிரஸ்

ரொம்ப எதிர்பார்த்து கமலின் ரசிகன் என்ற முறையில் ஏமாந்து போன படம். படம் ஆரம்பித்து அரைமணி நேரம் ஆகியும் படம் பார்க்கிற உணர்வே வரவில்லை. படத்திற்கு பேர் "செங்கோட்டை பாஸஞ்சர்"ன்னு வைத்திருக்கலாம். அவ்வளவு மெதுவாக நகர்கிறது. வையாபுரி, விருமாண்டி வில்லன், கமல் இவர்களோடு குதிரையும் கடி கடியென கடிக்கிறது. கமல் நடிப்பில் குறையில்லை என்றாலும்...(யாரு..சிங்கம்டா அண்ணன்!) திரைக்கதை வசனம் எல்லாம் சொதப்பல். பொதுவாக லாஜிக் இல்லாவிட்டாலும் சிரிக்கவைத்தாவது மழுப்புவார்கள்...இங்கே அதுவும் இல்லை. கிரேஸி மோகனையே போட்டிருக்கலாம். அரைத்த மாவாக இருந்தாலும் புளிக்காமலாவது இருந்திருக்கும். எப்படா படம் முடியப் போகிறது என்று இருக்கிறது. யூ டூ கமல்???


சந்திரமுகி...எதிர்பார்ப்பே இல்லாமல் பார்க்க ஆரம்பித்து சுவாரஸ்யமாக பார்த்த படம். பொதுவாகவே இந்த பேய், பிசாசு எழவெல்லாம் ரொம்ப பிடிக்கும். (கல்யாணமானா அப்பிடித்தான்). ரஜினி படத்திலா இப்பிடி...அப்பிடி போடு. ரஜினிக்கு மிகப்பெரிய ஷொட்டு. இமேஜை தூக்கி குப்பைத்தொட்டியில் போடுங்க சார். உங்கள் தற்போதைய ரசிகர்கள் உங்களோடு தான் இருப்பார்கள். இதமாதிரி வித்தியாசமான கதைகளையும் களங்களையும் தேர்தெடுங்கள். பொன்னம்பலத்திற்கும் பன்ஞ் டயலாக்கிற்கும் கொஞ்ச நாள் விடைகொடுங்கள், அத்தோடு அந்த ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை வரும் "அண்ணன் அப்பிடி இப்பிடி" ஜால்ரா வசனங்களுக்கும் நோ சொல்லுங்கள்...எங்க பக்கத்து வீட்டுப் பாட்டியையும் ரசிகர் மன்றத்தில் சேர்த்துவிடுகிறேன்.

பொதுவாகவே ரஜினி அடிக்கடி டுபுக்கு ப்ளாக்கிற்கு வந்து நான் எழுதுவதையெல்லாம் படிப்பார். ஒருவேளை இப்போதைக்கு வர முடியவில்லை என்றால் நீங்கள் யாராவது பார்த்தால் நான் சொன்னதாகச் சொல்லிவிடுங்கள். சந்தோஷப் படுவார்.

சச்சின் - நான் என் வர்ஷா குட்டிக்கு கதை சொல்லுவது மாதிரி எடுத்திருக்கிறார்கள். யானை வரும், பூணை வரும் அப்புறம் யானை திடீரென்று சிங்கப்பூருக்குப் போய் புட்பால் விளையாடும்.குரங்கு சேட்டை பண்ணும். பூணை புண்ணாக்கு திங்கும். மிச்ச கதைக்கு சச்சின் படத்தைப் பாருங்கள். இப்பிடித் தான் போகிறது.


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
     

This page is powered by Blogger. Isn't yours?