<$BlogRSDUrl$>

Friday, August 19, 2005

ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...1 

ஜொள்ள ஜொள்ள இனிக்குதைய்யா

விடலைப் பருவத்திற்கு "ஜொள்ளுவதோ இளமை" என்று பெரியோர்கள் அருளியிருக்கிறார்கள். அடியேனும் அதற்கு அப்பாற்பட்டவன் அல்ல. இங்கே ஜொள்ளுக்கு விளக்கம் குடுத்துவிடுவது நலம் பயக்கும்.

குணா கமல் மாதிரி லூஸாக அலைவது, இதயம் முரளி மாதிரி உருகி உருகி ஓடாய் தேய்வது,கல்யாணம் நிச்சயமான பெண்ணை ரூட்டு விடுவது, அதிமுக உறுப்பினர் மாதிரி நாக்கை அறுத்துக் கொள்வது எல்லாம் மோகத்திலே மூன்றாம் நிலை...காதலாகி கசிந்துருகி வகையாறா. சக்ஸஸ் என்றால் "சகியே..." என்று பாட்டுப் பாடி விட்டு சண்டை போட்டுக் கொள்ளலாம். தோல்வி என்றால் "ஆடிக்குப் பின்னால் ஆவணி..என் தாடிக்குப் பின்னால் ஒரு தாவணி " என்று பத்திரிக்கையில் குருவாச்சிக் காவியம் எழுதலாம். முடியாவிட்டால் ஒரு ப்ளாக் ஆரம்பித்து மானே தேனே போட்டு ஃபீலிங்காய் கவிதை எழுதினால் நாலு பேர் வந்து காறித் துப்பிவிட்டுப் போவதற்கு எதுவாக இருக்கும். ஒரு வேளை லூஸாகிவிட்டால் கதையை உல்டா பண்ணி சினிமாவில் போட்டு அவர்கள் காசு பாத்துவிட்டு கடைசியில் சின்னதாக உங்கள் பெயரையோ, உங்கள் காதலியின் ஆத்துக்காரரின் பெயரையோ நன்றியோடு போடுவார்கள்.

கூட்டமான இடங்களில் கார்த்திகை மாசத்து நாய் மாதிரி ஊளையிடுவது உரசித் தள்ளுவது போன்றவை காம வைகையாறா. இவர்களையெல்லம் கும்பீபாகம் படித்துவிட்டு ஜடை முடிந்து விக்ரம் எருமைமாட்டு மேல் வந்து கவனித்துக் கொள்வார். இல்லாவிட்டால் பிரதி மாதம் கரூர் - 10ம் தேதி, சேலம் - 15ம் தேதி, சென்னை 18- 22 லாட்ஜில் ரூம் போட்டு ஐந்து தலைமுறையாக சொப்ன லிகிதம் போன்ற வியாதிகளுக்கு வைத்தியம் பார்க்கும் சித்த சம்பூஷணம் கைராசி டாக்டர் முருகேசன் பார்த்துக் கொள்வார்.

நான் சொல்லும் ஜொள்ளு எனப்படுவது யாதெனின், அகலாது அனுகாது, மனதைப் புண்படுத்தாமல், அப்புறம் நினைத்துப் பார்க்கும் போது உதட்டின் ஓரத்திலோ, மனதின் ஓரத்திலோ சம்பந்தப்பட்ட பெண்மணி உட்பட எல்லாருக்குமே ஒரு புன்முறுவல் வரவைக்குமே...அது..அந்த குறும்பு, சேட்டை, ஃபீலீங்...அதே தான். இந்த சேட்டை சில நேரங்களில் காதலாக டெவலப் ஆகி சில அபாக்யவான்களுக்கு கல்யாணத்தில் முடிந்திருக்கிறது.

நான் சொல்ல நினைத்திருக்கும் இந்த சேட்டைகள் என்னுடையதும், என்னைச் சேர்ந்த வானரப் படை செய்தவையும். அஸ்வினி ஆயில் விளம்பரம் மாதிரி பெயர் விலாசம் போடாவிட்டாலும், சம்பந்தபட்டவர்களின் அடையாளங்களைப் பற்றி சின்ன க்ளு குடுத்தாலும் லண்டனுக்கு ஆட்டோ அனுப்பி ஊருக்கு கூட்டி வந்து மரியாதை செய்வதற்கு க்யாரண்டி இருப்பதால், அவற்றைத் தவிர்த்துவிடுகிறேன்.

மற்றபடி வாரம் ஒரு வானரம்...என்று ஜொள்ளலாமென்று இருக்கிறேன்.

--இன்னும் ஜொள்ளுவேன்

அன்புள்ள ஆத்துக்காரிக்கு - தலைப்பு கடந்த காலத்தில் ஒலிப்பது பற்றி உனக்கு ஆட்சேபணை இருக்கலாம் (இப்ப மட்டும் என்ன வாழுதாம்?). ஜொள்ளு விட்டதை நானும் "ஆட்டோகிராஃப்", "போட்டோகிராஃப்" என்று ஜல்லியடிக்கலாம் என்று தான் நினைத்தேன். எதுக்கு என்று தான் தான் இப்பிடி... இதை நாம் அடுத்தமுறை இந்தியா போகும் போது நல்லி குப்புசாமி செட்டியார் கடையிலோ, ஜி.ஆர்.டி தங்கமாளிகயிலோ பேசித் தீர்த்துக்கொள்ளலாம்.


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
     

This page is powered by Blogger. Isn't yours?