<$BlogRSDUrl$>

Friday, September 23, 2005

ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...7 

For previous Parts -- > Part 1      Part 2    Part 3    Part 4    Part 5    Part 6

கல்யாணத்திற்கு இரண்டு நாட்கள் இருந்தது. அடுத்த நாள் தான் மண்டபத்துக்குப் போவதாக ஏற்பாடு. தெருவில் இரண்டு வீடுகளை வாடைக்கு எடுத்திருந்தார்கள். நான், மெட்ராஸ், மற்றும் இன்னும் ரெண்டு பேரும் செட் சேர்ந்தோம். மெட்ராஸ் நல்ல கலகலப்பாகப் பழகினான். ராத்திரிக்கு தண்ணியடிக்க அழைத்துப் போவதாய் அன்பாகச் சொன்னான். பழக்கமில்லை என்றவுடன் கலாய்க்காமல் பண்பாக விட்டுவிட்டான்.நல்ல பையனாகத் தான் தெரிந்தான்.

பம்பாயும் அவளைவிட கொஞ்சம் வயது குறைந்த இன்னும் இரண்டு குட்டிகளும் செட்டு சேர்ந்திருந்தார்கள். என்னமோ பேசி க்ளுகென்று அடிக்கடி சிரித்துக் கொண்டிருந்தனர். அன்று மதியம் நான் இந்தப் பக்கம் போய் மோர் குடித்துவிட்டு வருவதற்குள் மெட்ராஸ் நைஸாக நூல்விட்டு கடலை வறுக்க ஆரம்பித்திருந்தான். நெல்லுக்குப் பாயறது புல்லுக்கும் பாயட்டுமே என்று நானும் சேர்ந்து கொண்டேன். என்ன இருந்தாலும் மெட்ராஸ் மெட்ராஸ் தான்! ஹிந்தியெல்லாம் பொளந்து கட்டினான். என்னோட ஹிந்தி மாமி அவ்வளவு தூரம் சொல்லிக் குடுக்கவில்லையாதலால் நானும் கச்சேரிக்குப் போனேன்ங்கிற ரீதியில் சும்மா அச்சா குச்சா என்று ப்ரவேஷிகா ஹிந்தியில் ஜால்ரா போட்டுக்கொண்டிருந்தேன். நல்லவேளை ரொம்ப நேரம் ஜால்ரா போடவேண்டிய அவசியமில்லாமல் பம்பாய் கொஞ்ச நேரத்தில் கிளம்பிவிட்டது. சும்மா அறிமுகம் தான் படுத்திக்கொண்டார்கள் என்பது புரிந்தது.

மெட்ராஸ் இருக்கும் போது பம்பாய் முன்னால் என்னால் ஷோபிக்க முடியாதென்று நன்றாகப் புரிந்தது. பம்பாய் ஐம்பதாயிரம் கலர் பட்டுப்புடவை ஜோதிகா மாதிரி அடிக்கடி ட்ரெஸ் மாற்றிக்கொண்டிருந்தாள். மெட்ராஸ் இதெல்லாம் அவனுக்காகத் தானென்றும், நான் எனக்காத் தான் என்றும் நினைத்துக் கொண்டோம். பம்பாய் நல்ல பதவிசாகப் பழகினாள். மெட்ராஸ் அடிக்கடி எதாவது சொல்லிக்குடுத்துக் கொண்டிருப்பான். பம்பாய் ஜன்னல் வைத்த சட்டை போட்டுக் கொண்டுவந்தால் வாஸ்து சொல்லுவான், பஜ்ஜியும் சொஜ்ஜியும் தின்று விட்டு ஜோக் அடிப்பான், பாட்டு பாடுவான். எனக்கு வெறும் காத்து தான் வரும். கூடவே காதிலிருந்து புகையும் வரும். "சுகப் பிரசவம் பார்பது எப்பிடி" என்பது தவிர கிட்டத் தட்ட எல்லா விஷயங்களையும் மெட்ராஸ் தெரிந்து வைத்திருந்தான். பம்பாய்க்கு என்மேல் ஒரு "இது" என்ற நம்பிக்கை வெகு சீக்கிரத்தில் புஸ்ஸாகிப் போனது.

கல்யாணங்களில் களை கட்டுவதே இரவு நேர அரட்டைக் கச்சேரிகள் தான். வெத்தலை போட்டுக்கொண்டு சில மாமாக்கள் அடுத்தாத்து மாமிகள் முன்னால் பிரதாபங்களை அளந்து விட்டுக் கொண்டிருப்பார்கள். ஒருபக்கம் பட்டுப் புடவை மாமிகள் தங்களுக்குள் ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருப்பார்கள். அதுவும் இந்த முப்பதிலிருந்து நாற்பது வரை உள்ள அக்கா மாமிகளின் அரட்டையிருக்கிறதே...எஸ்.ஜே.சூர்யா ரகம். ஒரு தடவை காது குடுத்துக் கேட்டேன்...அடேயப்பா....ஆம்பளைகளையும் மிஞ்சி விட்டார்கள்.காதைப் பொத்திகறதுக்கு பத்து கைவேண்டியிருந்தது. சை என்று ஆகிவிட்டது. அதிலிருந்து இப்பொதெல்லாம் கல்யாணத்திற்கு போனால் இவர்கள் அரட்டையை மிஸ் பண்ணுவதே கிடையாது.

"அந்தாக்க்ஷரி" இல்லாத கல்யாணமும் கல்யாணமா? பம்பாய் அண்ட் கோ "அந்தாக்க்ஷரி" என்ற பாட்டுக்குப் பாட்டு விளையாட்டு ஆட ஆரம்பித்திருந்தார்கள். இத இத இதைத் தானே எதிர்பார்த்தோம். உடனே கூட்டத்தோடு கோவிந்தாக்களாய் நாங்களும் ஐக்கியமானோம். இந்த மாதிரி விளையாட்டுக்களில் வடகத்திய கூட்ட தொல்லை தாங்கமுடியாது. "சிந்தகி", "சப்னே", "மொஹபத்", "இஷ்க்" - இப்பிடி எதாவது வரும் ஹிந்தி பாட்டைப் பாட ஆரம்பித்துவிடுவார்கள். ஹிந்தி ப்ரவேஷிகா பரீட்சையில் எனக்கு இந்த மாதிரி சினிமா பட்டெல்லாம் சொல்லிக்குடுக்கவில்லை. என்னுடைய சுய ஆர்வத்தால் "சாரே ஜகான்சி அச்சா " மட்டும் ரெண்டு வரி தெரியும். கூட இருந்த ரெண்டு தீவட்டிகளுக்கு அதுவும் தெரியாது. இருந்தாலும் மெட்ராஸோடு சேர்ந்து கொண்டு கோவிந்தா பாட்டு பாடி ரொம்ப நாறாமல் சமாளித்தோம். முந்தின பாட்டிலிருந்து சில கீ வேர்ட்ஸ் நியாபகம் வைத்துக் கொண்டு அடுத்த அடுத்த கோவிந்தா பாட்டில் பாடுவோம். மிச்சத்தை மெட்ராஸ் பார்த்துக் கொள்வான்.

பம்பாய்க்கும் மெட்ராஸ்க்கும் இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டேவந்தது. மண்டபத்துக்கு வந்த பிறகு ரெண்டுபேரும் திடீர் திடீரென்று காணமல் போய்விடுவார்கள். எங்கேயாவது ஒரு மூலையில் கடலை போட்டுக்கொண்டிருப்பார்கள். ஹிந்தி படித்துக் கொள்ளவேண்டும் என்று எனக்கு ஆர்வம் பிறந்ததே இப்பிடித் தான். காசியாத்திரை, ஊஞ்சல் என்று எல்லா இடங்களிலும் மெட்ராஸ் பம்பாய் பின்னாடியே மோப்பம் பிடித்துக்கொண்டு போனான்.


கல்யாண வீடுகளில் அரட்டை அடித்து அடித்து களைத்துப் போய் மதியம் இரண்டு மணிக்கு ஒரு தூக்கம் வரும் பாருங்கள்...ஒன்னு ரெண்டு டயாப்டீஸ் மாமாக்களைத் தவிர மண்டபமே தூங்கிப் போகும். நான் மட்டும் என்ன விதிவிலக்கா? கனவில் பம்பாயில் ஹிந்தி மாமியோடு "ருக் ருக் ருக்" பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டு பிரவேஷிகா பரீட்சையில்...இந்தியாவிலேயே முதல் மாணவனாய்த் தேறி ராஷ்டிரபதி என் நெஞ்சில் பதக்கமும் குத்தி ஹிந்தி மாமியையும் கல்யாணம் பண்ணிவைத்த அந்த வேளையில்...மெட்ராஸும் பம்பாயும் எங்கேயோ கடலை சாகுபடி செய்துகொண்டிருந்தார்கள். ஹிந்திமாமியோடு குடித்தனம் நடத்த பிடிக்காமல் நான் முழித்துப் பார்த்தபோது...ஒரு மூலையில் மெட்ராஸும் பம்பாய் கையையைப் பிடித்துக்கொண்டிருந்தான். அதற்கப்புறம் கொஞ்சம் நேரத்தில் இருவரும் சிரித்துக் கொண்டே வந்தார்கள்.

அன்று சாயஙகாலம் நாங்கள் புறப்பட வேண்டியிருந்ததலால் மெட்ராஸ் பம்பாய் எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டேன். மெட்ராஸ் கண்ணைச் சிமிட்டி அவனுக்கு பம்பாய் தான் இனிமே எல்லாம் என்றான். வாழ்கைக்கு ஹிந்தி எவ்வளவு பிரயோஜனப் படும் என்று தெரிந்துகொண்டேன். ஆனால் அதற்கப்புறம் அவர்களை நான் பார்க்கவே இல்லை. இரண்டு வருடங்கள் முன்னாடி விசாரித்ததில் இருவரும் கல்யாணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன் - அவா அவா கணவன் மனைவியோட !


--இன்னும் ஜொள்ளுவேன்




Use this Comments(#)


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
     

This page is powered by Blogger. Isn't yours?