<$BlogRSDUrl$>

Thursday, September 01, 2005

கார்காலம் 

லண்டனில் போக்குவரத்து வசதிகள் நன்றாக இருப்பதால் 4 வருடங்களாக கார் வாங்க வேண்டும் என்று என்னமோ தோன்றவே இல்லை. குடும்பத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் செய்தி தெரிந்தபோது தான் லைசன்ஸுக்கே விண்ணப்பித்தேன். அதுவரை காரில் உட்கார்ந்து தான் போயிருக்கேனே தவிர காரைப் பற்றி ஏ.பி.சி (ஆக்ஸிலரேட்டர், பிரேக், காஸ்) கூடத் தெரியாது. யாரைக் கேட்டாலும் லைசன்ஸ் டெஸ்டில் குறைந்தது நான்கு முறையாவது பெயிலாயிப்பதாக பெருமையாகச் சொல்லிக்கொண்டார்கள். சிலபேர் கஜினி முகம்மது கேஸ். சரிதான் நமக்கு ஒன்றுமே தெரியாதே...நாம் லைசன்ஸ் வாங்கி கார் வாங்குவதற்குள் ரிடையர் ஆகிவிடுவோம் என்று நினைத்தேன். நல்ல வேளை எங்கோ எப்போதோ தெரியாமல் செய்த புண்ணியத்தால் இரண்டாம் முறையே பாஸ் செய்து காரும் வாங்கிவிட்டேன். முதலில் கொஞ்ச நாட்கள் உள்ளூரிலேயே ஜானவாசம் மாதிரி சுற்றிக்காட்டினேன். ஆனால் என் மகளுக்கே அது போர் அடித்துவிட்டது. இந்த ஊரில் ரவுண்டானாக்கள் தான் கொஞ்சம் சிக்கலே. எந்த எக்ஸிட்டில் போகவேண்டும் என்பதைச் சொல்ல மனைவி பக்கத்திலிருப்பார் ஆனாலும் கரெக்டாகத் தப்பாகப் போய்விடுவேன். அப்புறம் எங்கே போகிறோம் என்று தெரியாமலே கொஞ்ச நேரம் பெக்க பெக்கவென்று ஓட்டிக்கொண்டுபோவேன். முதலில் சமாளித்து விட்டேன். வழியில் தேம்ஸ் நதி வந்து போட்டெல்லாம் நின்று கொண்டிருந்தது. என் மகளுக்கு ஜாலி.

"குழந்த ஆசப்படுவாளேன்னு தான் இங்க வந்தேன்...பாரு எவ்வளவு குஷி அவளுக்கு.."

இரண்டாம் தரம் ஒரு நண்பர் வீட்டுக்கு போகவேண்டியது ஏதோ ஒரு அத்துவானக் காட்டில் சினிமா காம்ப்ளெக்ஸில் போய் நின்றோம்.சமாளிக்க முடியவில்லை அப்புறம் நண்பருக்கு போன் போட்டு அவர் வந்து கூட்டிக்கொண்டு போனார். அங்கே எப்பிடி போனோம் என்று அவருக்கு ரொம்ப ஆச்சர்யம்.

அடுத்த தரம் ரவுண்டானா ரொம்பப் படுத்திவிட்டது.

"நாந்தான் நாலாவது எக்ஸிட்ன்னு கரெக்டா சொன்னேனே..."

"அப்பிடின்னு நீ நினைச்சுண்டு இருக்க...இது நாலாவது எக்ஸிட்டா? இப்போ பார் எங்கே இருக்கிறோம் என்றே தெரியவில்லை"

"நான் கரெக்டாத் தான் சொன்னேன்...நீங்க தப்பா போனா நானா பொறுப்பு.."

"என்ன சொன்னேன் நொன்னேன்னு...இப்போ எங்கே இருக்கோம்னு கரெக்டா கண்டுபிடி பார்ப்போம்.."

"இது நல்லா இருக்கே...நீங்க தப்பா போயிட்டு நான் கண்டுபிடிக்கனுமா..உங்களோட இந்த கச்சேரிக்கெல்லாம் என்னால வயலின் வாசிக்கமுடியாது...நீங்களே கண்டுபிடிச்சுக்கோங்கோ.."

"பேசாம எரோப்பிளேன் முதலாளி பொண்ண கல்யாணம் பண்ணி இருக்கலாம். எரோப்பிளேன் ஓட்டறது ரொம்ப ஈ.ஸி இந்த ரவுண்டானா இழவெல்லாம் கிடையாது"

போனவாரம் மாதர் குல டெலிபோன் உரையாடலை ஒட்டுக் கேட்டேன்..இந்த ரவுண்டானா இழவால எல்லா புது ட்ரைவர் வீட்டுலயும் புருஷன் பெண்டாட்டிப் பிரச்சனை வருதாம்.


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
     

This page is powered by Blogger. Isn't yours?