<$BlogRSDUrl$>

Tuesday, September 13, 2005

பொன்னியின் செல்வன் 

சமீபத்தில் லண்டன் ப்ளாகர்ஸ் மீட்டில், நாங்களெல்லாம் ஒரு ஓரத்தில் வடை தோசையை நொசுக்கிக் கொண்டு இருந்த போது இன்னொரு ஓரத்தில் குருவும் "மே மாதம்" ஆனந்தும் கல்கியின் பொன்னியின் செல்வனை படமாக்குவது பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். (நான் கூட அருண்மொழித் தேவர் பாத்திரத்துக்கு மறைமுகமாக அப்ளிகேஷன் போட்டுப் பார்த்தேன்...காதில் விழாதமாதிரி நடித்து விட்டார்கள் சதிகாரர்கள்). சமீபத்தில் இருவரும் அதைப் பற்றி பதிந்திருக்கிறார்கள்.(படமாக்குவதைப் பற்றி).

என்னைப் பொறுத்தவரை பொன்னியின் செல்வனை ஒரே படமாக எடுப்பது என்பது, பதினெட்டு முழப் புடவையை கழுத்தில் "டை" யாக கட்டிக்கொள்வது போல. அரண்மனை மண்டபத்தில் ஓப்பனிங் சீனில் குலுக்கு நடனமும் பரதநாட்டியமும் கலந்து நடன மாதர் ஆடும் ஒரு ஆட்டம் என்று ஆரம்பித்து, அருவிக் கரையில் சொட்டச் சொட்ட ரொமேன்ஸ், நடு நடுவே சென்டிமென்ட் வசனங்கள், யானை பூனையெல்லாம் வைத்து சண்டைக் காட்சி இப்பிடி கமர்ஷியல் காம்ப்ரமைஸ்களுக்கு நடுவே பொன்னியின் செல்வனை சொதப்பாமல் எடுக்க ரொம்ப பிரயத்தனப் பட வேண்டும். எடுக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று தெரிந்தால் போதும் ஒரு அரை குறை "பொன்னியின் மைந்தன்" என்று போட்டி படத்தை அவசர அவசரமாக தீபாவளிக்கு ரிலீஸ் செய்து கிடைச்சது லாபம் என்று உலகத் தொலைக்காட்சிகளிலே முதன் முறையாக உலவ விட்டுவிடும். "பீ", "சி" தியேட்டர்களில் ஓட வேண்டும் என்பதற்காக அஜீத் மாமா தொப்பையைக் காட்டிக் கொண்டும், ராணி வேஷத்தில் வசதியாக கவர்ச்சிக் கதாநாயகியும் (பிஸின்னோ அஸின்னோ ) "குந்தவை ராசா" , "வை வை குந்தவை பார்கிறவன் கண்ணுல் தீயவை" என்ற த்த்துவப் பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டு மகிழவைப்பார்கள். கோயில் திருவிழா, மசாலா மிக்ஸ், டாப் டென் என்று எல்லா இடங்களிலும் பார்த்துப் பார்த்து அலுத்துப் போய் அப்புறம் பொட்டியில் போய் படுத்துக் கொள்ளும்.

முதலில் உண்மையான நோக்கத்துடனும், வெறியுடனும் எடுக்க ஆரம்பித்தவர் பாதி கிணறு தாண்டிய பிறகு பைனான்ஸ் பிரச்சனையால் உலக வங்கியில் கடன் வாங்க அப்ப்ளிகேஷன் போட்டுவிட்டு பட்த்தை கிடப்பில் போட்டுவிடும் அபாயமும் இருக்கிறது.

என்னவோ எனக்கு "பொன்னியின் செல்வன்" படமாக வரவேண்டும் என்றும் இருக்கிறது வேண்டாமென்றும் இருக்கிறது. பொன்னியின் செல்வன் படித்தவர்கள் எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் மனதில் ஒரு வடிவம் கொடுத்திருப்பார்கள். திரையில் அதைக் கொண்டு வந்து எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது என்பது மிகப் பெரிய சவாலாக இருக்கும். அதில் தான் படத்தின் வெற்றியும் அடங்கி இருக்கும் என்று தோன்றுகிறது.

நான் "லக்ஷிமி"யாக நினைத்து வைத்திருக்கும் குந்தவை, இன்றைய காலேஜ் பசங்களுக்கு அஸினாகத் தெரியலாம் இல்லை டமீல் பேசும் வடநாட்டு நடிகையாகத் தெரியலாம்.

நான் படித்த போது என் மனதில் தோன்றியவர்கள்

அருண்மொழித் தேவர் - சிவாஜி கணேசன்
வந்தியத் தேவன் - ஜெமினி கணேசன்
(வேறு யாரையும் பேண்ட்டுக்கு மேல் குட்டைப் பாவாடை போட்டுக் கொண்டு நினைக்கத் தோன்றவில்லை)

குந்தவை - லெஷ்மி
(சின்ன வயது லெக்ஷ்மி ஓய்...இப்போ லெக்ஷ்மியை போட்டால் எங்க தாத்தா கூடப் பார்க்கமாட்டார்)

பெரிய பழுவேட்டரையர் - பி.எஸ்.வீரப்பா
சின்ன பழுவேட்டரையர் - ஆர்.எஸ்.மனோகர்

நந்தினி, வானதி - சாண்டில்யன் கதைகளுக்கு சித்திரங்களில் வரும் கதாநாயகிகள்

மற்ற எல்லார் பாத்திரங்களுக்கும் மனதில் பழைய படங்களில் வரும் நடிகர்களின் உருவம் இருக்கிறது ஆனால் பெயர்கள் தெரியவில்லை.

உங்களுக்குத் தோன்றிய கற்பனைகளையும் அறிய ஆவலாய் இருக்கிறேன்.


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
     

This page is powered by Blogger. Isn't yours?