<$BlogRSDUrl$>

Friday, September 30, 2005

பாரதியார் ஓணம் அவியல் சென்னை தோசா 

எனது மகளையும் , மனைவியையும் நடனப் பள்ளியில் கொண்டு விட்டு கூட்டிக்கொண்டு வருவது ஞாயிற்றுக் கிழமை ஜோலிகளில் ஒன்று. அவர்கள் ஜாலியாக ஆடப் போய்விடுவார்கள். நான் இரண்டாவது குழந்தையை...பால் புட்டியுடன் பார்த்துக்கொள்வேன். இந்த இடைப்பட்ட நேரத்தில் நானும் அந்தப் பள்ளியை நடத்துபவரும் (மலையாளி) அரட்டை அடித்துக்கொண்டிருப்போம்.

இந்தப் பழக்கத்தினால் இரண்டு வாரங்களுக்கு முன் அவரிடமிருந்து ஒரு எதிர்பாராத அழைப்பு. ஓணத்திற்க்காக மலையாளிகள் சங்கமும் எங்கள் கவுன்சிலும் சேர்ந்து ஒரு விழா நடத்தப் போவதாகவும், அதில் பாரதியாரின் கவிதைகளைப் பற்றி நான் பேச முடியுமா என்றும் கேட்டார். கல்லூரி நாட்களில் நிறைய பட்டிமன்றங்களில் பேசிய அனுபவம் உண்டென்றாலும், கொஞ்சம் உதறலாய் இருந்தது. ஓசிச் சாப்பாடு போடுகிறார்கள் என்று தெரிந்ததும் என்னையுமறியாமல் ஒத்துக்கொண்டேன்.

ஆரம்பித்தது வினை. "ஐய்யோ பாவம் பாரதியார்..." என்று ஆரம்பித்து மனைவி சொல்லிச் சொல்லி என்னை ஓட்டியது சொல்லி மாளாது.
"ப்ரிப்பேர் பண்ணியாச்சா? எங்கே ஒரு தரம் சொல்லுங்கோ பார்போம்" - தோசைக்கு ஒருதரம் துவையலுக்கு ஒருதரம் என்று பரீட்சை எழுதும் பத்தாம் கிளாஸ் மாணவன் மாதிரி நான் பட்ட துயரங்கள் எண்ணிலடங்கா.

பாரதியார் என் ஃபிரண்டில்லை...நான் அவரைப் பற்றிப் பேசப் போகிறேன் என்று தெரிந்ததும் என் மகள் வர்ஷாவிற்கு "ஓக்க்க் தட் நில்ல் பெ fஉன்ன்ய்..." என்று சிரிப்போ சிரிப்பு.... என் மனைவி இது போறாது என்று பக்கத்திலிருந்த இன்னொரு தமிழ் ஜோடியிடம் சொல்ல அவர்களும் நான் பேசுவதைப் பார்க்க ஆர்வமாகி வருவதாகச் சொன்னார்கள்.

இங்கே பிரேமலதா பாலன் தம்பதியினரைப் பற்றிச் சொல்லவேண்டும். இந்த ப்ளாக் மூலமாக கிடைத்த இனிமையான நண்பர்கள். அவர்களுடன் போன வாரம் முதன் முதலில் தொலைபேசியில் பேசிக் கொன்டிருந்த போது நான் இதுபற்றி லேசாக உளறிவிட...அவர்களும் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு கண்டிப்பாய் வருவதாய் சொன்னார்கள். தனியாக சொதப்பினாலாவது வெளியே தெரியாது. இப்பிடி எல்லாரையும் கூட்டிவைத்துக்கொண்டா சொதபுவது. அதுவும் முதல் சந்திப்பு இப்பிடி டென்ஷனிலா நடக்கவேண்டும் - எனக்கு உள்ளூர ஜுரம் ஏறிக்கொண்டிருந்தது.

நிகழ்ச்சிக்குப் போய் பார்த்தால் முழுவதும் சேட்டன்களும் சேச்சிகளுமாய் இருந்தார்கள். "என்ன சுகந்தன்னே.." என்று பட்டு உடுத்திக் கொண்டு விளித்துக் கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு நடுவில் ஜீன்ஸ் பேண்டும் காட்ராய் சட்டையும் போட்டுக் கொண்டு பரட்டைப் பாண்டியாய் பாரதியார் கவிதைகளைப் பற்றி பேச நான். வீடியோ காமிராவை கொண்டு எடுத்துவிட்டால் அதை வீட்டில் போட்டு போட்டு கேலிச் சிரிப்பு சிரித்து எனக்கு மரியாதை செய்வார்கள் என்பதால் நைஸாக வைத்துவிட்டு வந்துவிட்டேன். நல்ல வேளை பிரேமலதா பாலனும் கொண்டுவரவில்லை. என்னைத் தவிர மற்ற எல்லா நிகழ்ச்சிகளும் பாட்டு, நடனம், கச்சேரி என்று கலை நிகழ்ச்சிகள். ஜலதோஷம் பிடித்து மூக்கு ஞொண ஞொண என்று இருந்தது. இன்னும் கொஞ்சம் மூக்கால் பேசி மலையாள வாடையில் பேசி பாரதியாரை காப்பாற்றி விட்டேன். ஒருவர் என்னை போட்டோ வேறு எடுத்தார். (புதுசா ஃப்லிம் மாற்றியிருப்பார் என்று நினைக்கிறேன். முதல் போட்டோ வருமோ வரதோ என்று என்னை வைத்து திருஷ்டி கழித்திருக்கலாம்). நான் பேச ஆரம்பித்தது சில வயசான சேட்டன்களுக்கும், இன்னும் சில பேருக்கும் "சூச்சா" போய்விட்டு வருவதற்கு வசதியாக இருந்தது.

முடிவில் சோறு போடுவார்களென்று காத்திருந்தால்...பரிமாறுவதற்கு உதவிக்கு கூப்பிட்டார்கள். பாயாசம், ரசம், சாம்பார், உருளைக்கிழங்கு கறி, முட்டைகோஸ் கறி என்று பிரமாதப் படுத்தியிருந்தார்கள். மலையாள அவியல் வாசனை மூக்கைத் துளைத்தது. நானும் பாலனும் பரிமாறும் கூட்டத்தில் சேர்ந்துகொண்டோம். வந்திருந்த கூட்டத்துக்கு இந்த சாப்பாடு காணாது என்று கொஞ்ச நேரத்திலேயே தெரிந்துவிட்டது. நமக்கு கடைசியில் கிடைக்காது என்று தெரிந்தும் பசியில் இன்முகத்தோடு சேட்டன்களுக்கும் சேச்சிகளுக்கும் அள்ளிப் பரிமாறியது விளக்கெண்ணயும் தேனும் கலந்து குடித்த மாதிரி இருந்தது. கடைசியில் காக்காய்க்கு போடுவது மாதிரி கொஞ்சம் சோறும் ரசமும் மட்டும் கிடைத்தது. பாரதியார் புண்ணியத்தில் ஈரத் துணியைக் கட்டிக்கொண்டு படுத்தோம். ஆனால் அடுத்த நாள் பாரதியார் கைவிடவில்லை. பாலன் பிரமலதாவைக் கூட்டிக் கொண்டு சென்னை தோசா சென்று முந்தின நாளுக்கும் சேர்த்து ஒரு கட்டு கட்டினோம். நான் தான் பில்லு கொடுப்பேன் என்று முதலிலேயே பிட்டு போட்டு வத்திருந்தாலும் கடைசியில் "நான் குடுப்பேன்.. நீ குடுப்பேன்னு" பில்லு குடுப்பதற்கு நாடகம் நடத்தி கடைசியில் பாலன் தான் காசு குடுத்தார். சாப்பிட்ட சாப்பாடு கூடக் கொஞ்சம் இனித்தது. மனுசன் ரொம்ப வெள்ளந்தியாக இருக்கிறார். ப்ளாக் எழுதுவதாலும், பாரதியாராலும் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று நன்றாகத் தெரிந்தது.

அடுத்த வாரம் யாராவது வீட்டுக்கு வர்றீங்களா? சென்னை தோசா போகலாம்...பில்லு நான் தான் குடுப்பேன் சொல்லிட்டேன் ஆமா...


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
     

This page is powered by Blogger. Isn't yours?