<$BlogRSDUrl$>

Wednesday, October 19, 2005

ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...9 

For previous Parts -- > Part 1      Part 2    Part 3    Part 4    Part 5    Part 6    Part 7    Part 8

வறுக்காத ரவை கேட்டதும் கண்ணாடிக் கிளி ரொம்பவே குழம்பிப் போனாள்.
"ரவையா?
"ஆமாம் கேசரி செய்வார்களே அதே ரவை"
"கேசரியா?!%?"
"ஆமாம் பெண் பார்க்க வரும்போதெல்லாம் செய்வார்களே..கேசரி"
இந்த மாதிரி விழாக்களில் பையன்கள் சகட்டு மேனிக்கு கலாய்ப்பான்கள் என்பதால் நான் அவளை கலாய்க்கிறேன் என்று முடிவே கட்டிவிட்டாள்.
"இப்ப உங்களுக்கு என்ன வேண்டும்..."
"ரவை வேண்டும்..வறுக்காதது"
"..." அவளுக்கு என்னத்திற்கு ரவை வேண்டும் அதுவும் வறுக்காத ரவை வேண்டும் என்று புரியவே இல்லை. நான் அவளுக்கு கேசரி செய்ய சொல்லிக்குடுக்கலாமா இல்லை மிருதங்கம் வாசிக்கும் முறை பற்றிச் சொல்லிக்குடுக்கலாமா என்று யோசிப்பதற்குள் அடியில் பற்றிக் கொண்டால் போல் ஒருவன் ஓடிவந்தான்.
"ஹீ வான்ட்ஸ் கேசரி..ஐ டொன்ட் நோ வொய்" - கிளி அவனிடம் இங்கிலீஸில் பாட்டு பாடியது.
"கேசரியா..?"
"இல்லை கேசரி செய்யற ரவை...மிருதங்கம் வாசிக்கறதுக்கு கொஞ்சம் வறுக்காத ரவை வேணும்"
"மிருதங்கத்துக்கு ரவையா... எதுக்கு?" - நான் கடலை போடுவதற்கு என்னமோ ரவை கேட்ட மாதிரி மிரட்டினான்.

கிளி கேட்டிருந்தாலாவது விலாவாரியாக சொல்லியிருப்பேன்.. இந்தத் தடியனுக்கு சொல்லிக்குடுப்பதற்கா எங்க மாமா என்னை மிருதங்கம் படிக்க வைத்தார்..

"ரவை இல்லாட்ட மிருதங்கத்தில் சரியா சத்தம் வராது. தொட்டு தொட்டுன்னு தான் வரும்"

"ஏன் தொட்டுனக்கு தொட்டுனக்குன்னு தான் வாசிங்களேன்.." - நக்கல்

தொட்டு நக்கறதுக்கு இதென்ன மாம்பழப் பச்சடியா.. கேட்டிருப்பேன் வேளைக்கு இருபது இட்லி நோகாம சாப்பிடுவது மாதிரி திடகாத்திரமாக இருந்ததால் கொஞ்சம் பயமாக இருந்தது. "இல்ல வறுக்காத ரவை கிடைக்குமா.." என்று பழைய பல்லவியையே பாடினேன்.

"எங்க காலேஜில் ரேஷன் கடையெலாம் இல்ல சாரி ஹீ ஹீ" கிண்டல் அடித்துவிட்டு கிளியைப் பார்த்து சிரித்தான். பக்கத்தில் கிளி இருந்தால் எல்லாப் பையன்களுக்கும் வரும் நக்கல் சின்டிரோம் தான். கிளியும் சுமாராய் சிரித்து வைத்தது.

"....உங்க காலேஜில் ஹாஸ்டல் இருக்குமே அங்கே மெஸ் என்று ஒன்று இருக்குமே அங்கே கேட்டால் கிடைக்கும் அதான் கேட்டேன்" - கிளி நான் கடலை பார்ட்டி என்ற சந்தேகம் போய் ஜென்டில்மேன் தான் என்று புரிந்து கொண்ட மாதிரி தெரிந்தது.

மேற்காலே போய் பீச்சாங்கைப் பக்கம் போன்னு வழிகாட்டிவிட்டான். கிளிக்கு மட்டும் "ரொம்ப தேங்ஸ்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

போகிற வழியில் எதுக்கும் இருக்கட்டும் என்று பரதநாட்டியப் பெண்களிடமெல்லாம் வறுக்காத ரவை கிடைக்குமா என்று வறுத்துக் கொண்டே போனோம். மெஸ்ஸில் ரவை கிடைத்து வாங்கிக் கொண்டுவரும் போது அந்தப் பெண்களிடம் ரவை கிடைத்து விட்டது எங்களுக்காக கஷ்டப்பட்டுத் தேடவேண்டாமென்று திருப்பியும் ஒரு தரம் வறுத்து விட்டுப் போட்டியில் வாசித்தேன். கண்ணாடிக் கிளி நான் எப்பிடி வாசிக்கிறேன் என்று பார்த்துவிட்டு கை தட்டினாள்.

இப்படியாக நான் யூத் பெஸ்டிவல் போய்வந்துகொண்டிருந்த காலத்தில் தமிழ்நாட்டுப் பல்கலைகழங்களுக்கு இடையே நடத்தும் இன்டர் யுனிவேர்ஸிட்டி பெஸ்டிவல் நடத்தும் பொறுப்பு எங்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்தது. இந்த விழா எங்கள் ஊருக்கு பக்கத்திலிருக்கும் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் நடப்பதாக முடிவாகியிருந்தது. மிகவும் அருமையான இடம். பொதிகை மலையில் அமைந்திருக்கும் கல்லூரி இது. மலையில் ரொம்பவும் ஏறாமல் ஆரம்பத்திலேயே இருக்கும். கல்லூரி அமைந்த இடமே ரம்மியமாய் இருக்கும்.

போட்டி காலேஜ்களுக்கிடையே இல்லாமல் பல்கலைக்கழகங்களுக்கிடையே நடக்கும் என்பதால் எங்கள் பல்கலைக்கழக குழுவை தேர்ந்தெடுப்பதற்காக எங்கள் மாவட்ட கலூரிகளுக்கிடையே போட்டி வைத்தார்கள். அவற்றில் சிறந்தவர்களை ஒரு குழுவாக எங்கள் யுனிவர்ஸிட்டி சார்பாக பங்கேற்க வைப்பார்கள்.

இந்த இடத்தில் குற்றாலம் பராசக்தி கல்லூரி பற்றி சொல்லிவிட வேண்டும். குற்றாலம் என்றால் உங்களுக்கு அருவி நியாபகத்துக்கு வந்தால் எங்க ஊர் வயசுப் பசங்களுக்கு பராசக்தி கல்லூரி தான் நியாபகம் வரும். அவ்வளவு அருமையான கல்லூரி. பெண்கள் மட்டுமே படிக்கக் கூடிய டீம்ட் யுனிவர்ஸிட்டி. அதுவும் எங்கள் கல்லூரி தான் அவர்களுக்கு அந்த வட்டாரத்திலேயே பக்கம் என்பதால் இரு கல்லூரிகளுக்குமிடையே இருக்கும் இணக்கம் அதிகம்.

தகுதிப் போட்டியே பலமாக இருந்தது. தகுதிப் போட்டி முடிந்ததும் உடனே முடிவை அறிவிக்காமல் ஊருக்குப் போய் லெட்டர் போடுகிறோம் என்கிற ரீதியில் அறிவித்தார்கள். இல்லாவிட்டால் காலேஜுகளுக்குள் சண்டை வரும் என்று நினைத்தார்கள் போலும். நானும் சரி ஆச்சு அம்புட்டுத்தான் என்று வந்துவிட்டேன். போட்டி நடப்பதற்கு முந்தின நாள் வரை தகவலே இல்லை. முந்தின நாள் குண்டு வாத்தியார் க்ளாஸ் நடக்கும் போது நடுவில் வந்து நான் செலெக்ட் ஆகியிருப்பதாகச் சொன்னார். மெடல் வாங்கிவந்தால் காலேஜுக்குப் பெருமை என்று இன்னும் எதெல்லாமோ சொன்னார். எனக்கு எங்க டீமில் வேறு யார் யார் இருப்பார்கள் என்று தயக்கம். ஒருவழியாக லிஸ்டை நைசாக லவட்டிப் பார்த்தேன்.


எங்கள் யுனிவர்ஸிட்டி குழுவில் மொத்தம் பதினாறு பேர்கள். பத்து பெண்கள் - அனைவரும் பராசக்தி கல்லூரியிலிருந்து. என்னையும் சேர்த்து ஆறு ஆணக்ள். ஐந்து பேர் திருநெல்வேலி கல்லூரிகளிலிருந்து. அட்ரா சக்கை அட்ரா சக்கை...மனம் குதூகலித்தது.


--இன்னும் ஜொள்ளுவேன்


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
     

This page is powered by Blogger. Isn't yours?