<$BlogRSDUrl$>

Tuesday, October 25, 2005

அறுசுவை 

போன வாரம் ரொம்ப பிஸியாக ஓடி விட்டது. வீட்டில் மனைவிக்கு உடல் நலக் குறைவு. ஐய்யா தான் ஆல் இன் ஆல் அழகுராஜா. குழந்தை பராமரிப்புலேர்ந்து சமையல் நேரம் வரை பார்பதற்குள் எட்டு புள்ளை பெத்த மாதிரி உடம்பு பென்ட் நிமிர்ந்துவிட்டது. பொதுவாக மனைவி சில ஸ்பெஷல் பதார்த்தங்கள் செய்தால் என்னிடம் தான் உப்பு, உரப்பு சரியாக இருக்கா என்று பார்க்கச் சொல்லுவார். இதனாலேயே எனக்கு மனதில் அறுசுவை நடராஜன் என்று நினைப்பு இருப்பதாக அடிக்கடி மரியாதை செய்வார்.

ஸ்பெஷல் பதார்த்தங்களுக்கே உப்பு உரப்பு பார்க்கும் எனக்கு சாதரண சமையலா பெரிது என்று சென்னா மசாலா செய்ய இறங்கினேன். தேவையான கிரேவி தயாரானதும் உப்பு உரப்பு ஸ்டையிலா போட்டு ஸ்பூனால் எடுத்து டேஸ்ட் பார்த்தால் ஒரே உப்புக் கரிப்பாக இருந்தது. சரி கொஞ்சம் எலுமிச்சை ஜூஸ் விட்டு சரி பண்ணிவிடலாமென்று விட்டு விட்டு மீண்டும் சரி பார்த்தால் உப்பே இல்லை. அப்புறம் தான் மணடையில் உரைத்தது. உப்பு போட்ட ஸ்பூனாலே டேஸ்ட் பார்த்தேன் என்று. மீண்டும் கொஞ்சம் உப்பைப் போட்டு விட்டு சரி பார்த்தால் சரியாகி இருந்தது. டின்னில் இருந்து சென்னாவை போட்டு கொதிக்கவிட்டு பார்த்தால் மீண்டும் உப்புக் கரியாக இருந்தது. கடங்காரன் டின்னில் உப்புத் தண்ணியில் சென்னாவை வைத்திருக்கிறான். சரி மீண்டும் எலுமிச்சாபிஷேகா தான் என்று தெளித்ததில் மூடி சென்னாவில் உள்ளே விழுந்து ஜூஸ் பொல பொலவென சென்னாவில் கொட்டிவிட்டது. மூடியை சென்னாவில் தேடி எடுக்கும் போதே தெரிந்துவிட்டது என்ன லட்சணமாக இருக்குமென்று. கர்பஸ்தீகள் கூடத் தொடமாட்டார்கள் அப்பிடி ஒரு புளிப்பு. இருந்தாலும் தேவாமிர்தமாக இருக்கு என்று சொல்லிக்கொண்டே முழுங்கி வைத்தேன். "உனக்கு உடம்பு சரியில்லை சென்னா மசாலா சாப்பிடக்கூடாதென்று டாக்டர் சொல்லி இருக்கார்" - மனைவிடம் வள்ளுவர் பெயரால் பொய்மையும் வாய்மையிடத்திவிட்டு சொன்ன கையோடு மிச்சத்தை ஆபிஸுக்கு எடுத்துக் கொண்டு போய் தூரப்போட்டிருக்கவேண்டாமோ...மனுஷன் சாப்பிடுவானா இத என்று மனதிற்குள் சொல்லிவிட்டு கையை வீசிக்கொண்டு சென்று பிட்ஸா சாப்பிட்டுவிட்டேன். ஆத்துக்காரர் ஆசையோடு பண்ணிவைச்சதை டேஸ்ட் பார்த்துவிட்டு "இதெல்லாம் ஒரு பொழப்பா..." என்று நேற்றெல்லாம் ஒரே புகழாரம் தான்.

மற்றபடி தீபாவளி பார்ட்டி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. வருகிறவர்கள் எண்ணிக்கை 51 தொட்டுவிட்டது. இடத்திற்கு சொல்லியாகிவிட்டது, சாப்பாடுக்கு சொல்லியாகிவிட்டது. வேலைகள் மளமளவென்று நடந்துகொண்டிருக்கிறது. நான் சக்ரா பாலன் என்று கான்பரன்ஸ் கால் போட்டு நல்லா அரட்டை அடித்துக்கொண்டிருக்கிறோம். இது போக இதுபற்றி திருமதி.உமா கிருஷ்ணாவிடம் வேறு அரட்டை. பிரமேலதா பாலன், உமா கிருஷ்ணா என்று ஒரு கூட்டமாக வேலை செய்துகொண்டிருக்கிறோம். பாட்டு, ம்யூஸிக் , நடனம் என்று ஒரே கும்மாளமாய் இருக்கிறது. நாளைக்கு விளையாட்டுக்களைப் பற்றி சொல்கிறேன். பார்டி மூலமாகவும் இந்த ப்ளாக் மூலமாகவும் புதிதாக நிறைய நண்பர்கள் கிடைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களைப் பற்றி இன்னொரு நாள் எழுதுகிறேன். அடுத்த ஜொள்ளித் திரிந்த காலத்தை வெள்ளிக்கிழமைக்குள் பதிந்து விடுகிறேன். அதுவரைக்கும்...


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
     

This page is powered by Blogger. Isn't yours?