Saturday, February 26, 2005
ஆடி
நான் டைரி எழுதிய லட்சணமாய் தான் இருக்கிறது இந்த ப்ளாக்கில் எழுதுவதும். கொஞ்ச நாள் ஒழுங்காக எழுதுவேன். அப்புறம்...வெத்துப் பக்கங்களாக விட்டுவிட்டு அங்கங்கே நிரப்புவேன். காலியான பக்கங்களில் மானே தேனே பொன்மானே..போட்டு கவிதை எழுதி எனக்கே சகிக்காமல் கிழித்துவிடுவேன். ஒன்று மட்டும் முடிவு கட்டிவிட்டேன் இனிமேல் நான் இங்கே காணாமல் போவதைப் பற்றிப் பேசி உங்கள் கழுத்தை அறுக்கமாட்டேன்.
சமீபத்தில் பார்த்த ஒரு படத்தைப் பற்றி எழுதிவைத்திருந்தேன். அந்தப் படம் அரதப் பழசாகி சன் டி.வியில் போடுவதற்க்கு முன்னால் இங்கே அதை எழுதிவிடுகிறேன்.
காதல்...
செமயா...கலக்கியிருக்கான்யா...என்று சொல்ல வைக்கும் ரகம். இந்த படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே...திரைக்கதை நல்லா இருக்கே...என்று நினைத்தேன். ஏமாற்றவில்லை.
படம் ஆரம்பித்து எழுத்து முடிவதற்குள் ...கொடுத்த காராச்சேவை முடித்து விட்டு "வேறெதாவது கொறிக்க இருக்காம்மா?" என்று மனைவியிடம் நொய் நொய்ங்காமல் காராச்சேவுக்குப் பதிலாக நகத்தைக் கடிக்கவைத்து விட்டார் இயக்குனர். பட்த்தின் மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்டே...திரைக்கதையும், நேட்டிவிட்டி குறையாமல் கலக்கி இருக்கும் அத்தனைக் கதா பாத்திரங்களும். வழக்கமாக படம் முடிந்து இரண்டு நாட்களுக்கு கதாநாயகிதான் மனதில் இருப்பார், அப்புறம் இன்னொரு படம் பார்ப்பேன்...அந்த கதாநாயகி இடம் பிடித்துவிடுவார், அப்படி இல்லாமல் இந்த படத்தில் திரைக்கதை நிற்கிறது. கதாநாயகன் குரங்குச் சண்டையோ, ஒத்தக் காலில் நொண்டிச் சண்டையோ போடாமல் யதார்த்தமாக அடிவாங்குகிறார். கதாநாயகி நடிப்பிற்கு ஒரு ஷொட்டு. ஸ்பென்சர் ப்ளாசா, ஸ்னோ பவுலிங் மாதிரியான இடங்களில் மட்டுமே அடிக்கடி பார்க்கமுடிகிற வெண்ணையைத் தின்று வளர்ந்த அரைகுறை ஆடை அணிந்த ஐம்பது கிலோ தாஜ்மஹாலாக இல்லாமல், நான் ஜொள்ளு விட்ட எங்க ஊர் ஸ்கூல் பொண்னுங்க மாதிரி இருக்கிறார். டைர'டக்கரின்' துணிச்சலுக்குப் பாராட்டுக்கள்.
வைன் ஷாப் அப்பா, ஒத்தக் கை சித்தப்பா...எல்லாரும் நிஜமாகவே மிரட்டுகிறார்கள். இண்டிப்ளாகீஸ் தேர்தலில் லீடிங்கில் இருந்த போது காசியும் பத்ரியும் சேர்ந்து ஓட ஓட விரட்டுவது மாதிரி கனவுகள் கண்டிருக்கிறேன். இந்த படத்திற்கப்புறம் இந்த ஒத்தக் கை சித்தப்பா தான் அடிக்கடி மிரட்டுகிறார்.
அந்தப் பாட்டியின் அலம்பல்கள் ஓவரோ என்றால் இல்லை. இதமாதிரி நிறைய பாட்டிகளை கிராமங்களில் பார்க்கலாம்.பார்த்திருக்கிறேன்.ஒருசில இடங்களில் அந்த தோழி டபுள் மீனிங்காய் இல்லாமல் நேரடியாகவே பச்சையாக பேசுகிறார். பக்கத்திலிருப்பவர் காதைப் பொத்த வேண்டியிருக்கிறது. தவிர்திருக்கலாம். ஒருவேளை இப்போ இது தான் எதார்த்தம் என்று வைத்துவிட்டாரோ என்னமோ.
படம் மிகவும் பிடித்திருந்தாலும் ஏற்கனவே ரெண்டுங் கட்டானாய் அலையும் ஸ்கூல் பசங்கள் இதை இன்னுமொரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்வார்களோ ? ஸ்கூட்டியை ஓட்டிக் கொண்டு போயே போய்விடுவார்களோ என்று தான் பயமாக இருக்கிறது. மெக்கானிக் பசங்களுக்கு க்ரேஸ் கூடினாலும் கூடலாம்.
நல்ல வேளை சன் டி.வி யில் டாப் டென்னில் இந்த படத்தை நக்கல் விடுவதற்கு முன் பார்த்துவிட்டேன். அந்த மூனு குண்டூஸும் சேர்ந்து கொண்டு அட்டகாசம் செய்துவிட்டன. இப்பிடியா மனதைப் பாதிக்கும் க்ளைமாக்ஸைப் பட்டென்று போட்டு உடைப்பது?
உண்மைக் கதையாமே...அந்த உத்தம புருஷனை நமஸ்காரம் பண்ணலாம்.
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad.